×

திரைப்படத்தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது: மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

மும்பை: திரைப்பட தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வால்கேஷ்வரில் வசிப்பவர் வருண் ராஜிவ்(34). இவர் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். வருணுக்கு ஜடின் மற்றும் வழக்கறிஞர் ஒருவரின் மகன் நண்பர்கள் ஆவர். கடந்த ஜூன் 8ம் தேதி ஜடினும் வழக்கறிஞர் மகனும் சென்று வருணை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது வருண் வீட்டிற்கு இரண்டு பேர் வந்தனர். அவர்கள் தங்களை ஜாபர் மற்றும் சமீர் என்று அறிமுகம் செய்து கொண்டு தாங்கள் போலீஸ் அதிகாரிகள் என்று சொன்னர். அதோடு வீட்டில் போதைப்பொருள் இருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்தனர். அதோடு வீட்டில் தேட ஆரம்பித்தனர். தேடும் போது அவர்களே போதைப்பொருளை மறைத்துவைத்துவிட்டு எடுப்பது போல் எடுத்தனர். போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல் இருக்கவேண்டுமானால் ரூ.5 லட்சம் கொடுக்கும்படி கேட்டனர்.

வருண் தன்னிடம் தற்போது ரூ.70 ஆயிரம் மட்டுமே இருப்பதாக கூறி கொடுத்தார். பின்னர் தனது நண்பர்கள் ஜடின் மற்றும் வழக்கறிஞரின் மகனிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்தார். அவர்கள் அனைவரும் சென்ற பிறகு வருண் இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வருண் வசிக்கும் கட்டிடத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது ஜடின், ஜாபர், சமீர், வழக்கறிஞர் மகன் ஆகிய நான்கு பேரும் ஒரே காரின் தான் வந்துள்ளனர். நான்கு பேரும் சேர்ந்துதான் இந்த மிரட்டி பணம் பறிக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஜாபர், ஜடின் ஆகியோர் கடந்த மாதம் 28ம் தேதி கைது செய்யப்பட்டனர். சமீர் கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். வழக்கறிஞரின் மகன் தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : Filmmaker ,arrests , Three arrested , threatening, filmmaker
× RELATED திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களிடம் பணம் வசூலித்த 3 பேரை கைது