×

நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை ஏன் நியமிக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ்: நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால் பதிலளிக்க உத்தரவு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷாலுக்கு பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகர் சங்கம் செயல்படவில்லை என்ற புகாரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜுன் மாதம் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதன் காரணமாக இதுவரை இந்த தேர்தலின் போது பதிவான வாக்குகள் எண்ணப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதே இதற்கு காரணம். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை வரும் 15-ம் தேதி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வர உள்ளது.

அன்றைய தினத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு திடீரென பதிவுத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷாலுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எம்.ஆர்.பி.சந்தானம் மற்றும் நடிகை சித்திரலேகா ஆகியோர் அளித்த புகாரின் பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பதிவுத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தினுடைய அன்றாட பணிகள் முறையாக நடைபெறவில்லை; அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் நடைபெறாததால் சங்க உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் விளக்கம் கேட்டு நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் சங்கம் முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏன் நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி ஒருவரை நியமிக்க கூடாது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதில் 30 நாட்களுக்குள் தங்களது பதிலை தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காலக்கெடு விடுக்கப்பட்டுள்ளது.


Tags : actor ,Actors' Association Vishal ,Nasar ,officer ,Naser , Notice, Nasser, Vishal
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...