×

ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த முதல் பட்டியலை இந்தியாவிடம் அளித்தது ஸ்விட்சர்லாந்து அரசு

டெல்லி: ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த முதல் பட்டியலை இந்தியாவிடம் ஸ்விட்சர்லாந்து அரசு வழங்கியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி, தனது தலைமையிலான அரசு அமைந்தால், சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றாதது பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதனிடையே வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்கவும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது. இதற்காக சர்வதேச உதவியையும் மத்திய அரசு நாடியது. அதன் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்து நாட்டின் உதவியுடன் அந்நாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் குறித்த பெயர் பட்டியலை பகிர்ந்து கொள்வது தொடர்பாக அந்நாட்டுடன் பிரதமர் மோடி ஒப்பந்தம் செய்தார். வரி விவகாரங்களில் இருநாடுகளும் பரஸ்பரம் உதவி புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தகளில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின்படி, செயல்பாட்டில் உள்ள கணக்கு விவரங்கள் மற்றும் கடந்த 2018-ம் ஆண்டில் முடித்துவைக்கப்பட்டுள்ள கணக்குகளின் விவரங்களின் முதல் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு இந்தியாவிடம் வழங்கியுள்ளது. மேலும் 2020 செப்டம்பர் மாதத்தில் 2-வது பட்டியலை வழங்க உள்ளது. இந்த விவரங்களை மத்திய அரசு பெற்று இருப்பதன் மூலம், கறுப்பு பணம் தொடர்பான வழக்குகள், வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளவர்கள், கணக்கில் வராத சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

சுவிட்சர்லாந்து அரசு இந்தியா உள்பட 75 நாடுகளுடன் சுவிஸ் வங்கி தகவல்களை பரிமாறிக்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த ஒப்பந்தத்தின் படி சுமார் 31 லட்சம் நபர்களின் வங்கி தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.


Tags : bank ,Swiss ,Indians , Swiss Bank, Indian, First List, Government of Switzerland
× RELATED கொரோனாவை கட்டுப்படுத்தும் சிறப்பு மாநகர பட்டியலில் சென்னை, பெங்களூரு