×

போடி மலைப்பகுதிகளில் மழை அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தேனி : போடி மலைப்பகுதிகளில் தொடரும் மழையால் அங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து தொடங்கி உள்ளது. தேனியில் இருந்து 25 கி.மீ தொலைவில் போடி மலைத்தொடர்கள் உள்ளது. இங்குள்ள கொழுக்குமலை, குரங்கணி, மரக்காமலை, டாப்ஸ்டேஷன், போடி மெட்டு மலைப்பகுதிகளில் தினமும் மழையும், சாரலும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் போடி மலைத்தொடர்களில் உள்ள பல்வேறு அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் கொட்டி வருகிறது.

இப்படி சிறியதாக தொடங்கும் பல அருவிகளில் வரும் மழைநீர் முழுக்க கொட்டகுடி ஆற்றுக்கு வந்து சேருகிறது. இதனால் பல நாட்கள் கழித்து கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து தொடங்கி உள்ளது. தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் குரங்கணி மலைப்பகுதிக்கு சென்று அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். போடி மலைப்பகுதிகளில் டிரக்கிங் செல்ல வனத்துறை அனுமதி அளித்து 40 நாட்களை கடந்த நிலையிலும் இதுவரை யாரும் டிரக்கிங் செல்லவில்லை. ஆனால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் கொட்டும் அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர்.

குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு நடந்த தீ விபத்தில் 22 பேர் பலியான சோக சம்பவத்தின் தாக்கம் தேனி மாவட்ட மக்கள் மனதில் இருந்து இன்னும் மாறவில்லை. இதனால் வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்த்து, தங்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்பதை உறுதி செய்த பின்னர், அந்த அருவிகளில் மட்டும் குளிக்கின்றனர். இதற்காக குரங்கணியில் வசிக்கும் மக்களின் உதவிகளை நாடுகின்றனர். குரங்கனி கிராம மக்களும், இந்த அருவி பாதுகாப்பானது என குறிப்பிட்ட சில அருவிகளை அடையாளம் காட்டுகின்றனர். தற்போது விடுமுறை காலம் என்பதால் குரங்கணியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

Tags : waterfalls ,Bodi Hills ,Flooding ,Bodi Area , Bodi ,Heavy rains,Flooding ,rain falls
× RELATED சுருளி அருவியில் குறைந்த நீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்