×

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமூக விரோதிகள் கூடாரமான பூங்காக்கள்

*பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கும் அவலம்

ஊட்டி : ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் அவை புதர்கள் மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் அவலம்  நீடிக்கிறது.  ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான இடங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னரே சிறு சிறு பூங்காக்கள் அமைக்கப்பட்டன. இதனை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இந்த பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. இதனால் அனைத்து பூங்காக்களும் புதர்மண்டி சமூக விரோத செயல்கள் அரங்கேறும் கூடாரமாக மாறி வருகின்றன.

  இந்த பூங்காக்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த திமுக ஆட்சியின்போது நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்த அனைத்து பூங்காக்களும் சீரமைக்கப்பட்டன. பூங்காக்களின் பராமரிப்பு பணி தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.  ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பூங்காக்களை பராமரிக்க நகராட்சி  நிர்வாகம் முயற்சி மேற்கொள்ளவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத நிலையில், நகராட்சி அதிகாரிகள் இந்த பூங்காக்களை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது கவுன்சிலர்கள் இல்லாத நிலையில், இந்த பூங்காக்களை சீரமைக்க குரல் கொடுக்க ஆளில்லாமல் போய்விட்டது.

இதனால், ஊட்டி நகரில் உள்ள அனைத்து நகராட்சி பூங்காக்களும் பொலிவிழந்து காணப்படுகிறது.  குறிப்பாக, கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள டேவிஸ் பூங்கா மீண்டும் காடாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நடைபாதைகள் மற்றும் நீரூற்றுகள், இருக்கைகள், சுற்றிலும் அமைக்கப்பட்ட வேலிகள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது. இங்கு புதர்கள் வளர்ந்துள்ள நிலையில், சிலர்  சமூக விரோத செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். அதேபோல் மத்திய பஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் பூங்கா, கோத்தகிரி சாலையில் உள்ள பூங்கா, அரசு கலை கல்லூரி அருகேயுள்ள பூங்கா உட்பட நகரில் பெரும்பாலான பூங்காக்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. எனவே இவற்றை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : areas ,tent parks ,Ooty ,Muncipality Social , ooty ,ooty Muncipality ,Social antagonists ,tent parks
× RELATED திருச்சுழி, நரிக்குடி பகுதியில் காட்டுப்பன்றிகளால் விவசாயம் நாசம்