×

வேப்பனஹள்ளியில் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியாற்றும் துப்புரவு ஊழியர்கள்

வேப்பனஹள்ளி  : வேப்பனஹள்ளி பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபடும் துப்புரவு ஊழியர்கள், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஆபத்தான முறையில் பணியாற்றி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதியில் தொடர் மழையால், சாக்கடை கால்வாய்களில் மண்மூடி தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால், மழைநீருடன் கழிவுநீரும் அடைத்துக் கொண்டு, தெருக்களில் பாய்ந்தோடி வருவதால் சுகாதார சீர்கேடு அபாயம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக டெங்கு பரவும் அபாயம் காணப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், கலெக்டர் பிரபாகர் வேப்பனஹள்ளி பகுதியில் நேரடி ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது, குப்பை கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்தினார். மேலும், கழிவுநீர் சீராக செல்லும் வகையில் சாக்கடை கால்வாய்களை தூர்வாரி தூய்மைப்படுத்துமாறு உத்தரவிட்டார். இதன்பேரில், வேப்பனஹள்ளி பகுதியில் சுகாதார பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், தனியாரும் தாமாக முன்வந்து தங்களது குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர். ஆனால், இந்த பணியில் ஈடுபடுத்தப்படும் துப்புரவு ஊழியர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி ஆபத்தான முறையில் பணியாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள்  கூறுகையில், ‘பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதியில் தினந்தோறும் மழை பெய்து வருகிறது. இதனால், சாக்கடை கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் தூர்ந்து போய் காணப்படுகிறது. கால்வாய்கள் முற்றிலும் அடைப்பட்டுள்ளதால் மழைநீருடன் சாக்கடை நீரும் ரோட்டில் பெருக்கெடுப்பதும், குடியிருப்புகளுக்குள் நுழைவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில், சாக்கடை கால்வாய்களை தூர் வாரும் பணியில் தனியாரும் ஈடுபட்டுள்ளனர். ஆனால், உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியாற்றி வருவது வேதனையளிக்கிறது. இதனால் அசம்பாவிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,’ என்றனர். இதுபற்றி துப்புரவு ஊழியர்கள் கூறுகையில், ‘காலுறை மற்றும் கையுறைகள் போதுமான அளவில் வழங்காததால் வெறுங்காலுடன் கால்வாயில் இறங்கி சேற்றை அள்ளுகிறோம். இதன் காரணமாக உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு, நாளடைவில் அந்த இடம் புண்ணாகி விடுகிறது. எனவே, எங்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Cleaning staff ,Veppanahalli , safety equipment,Cleaning staff,Veppanahalli
× RELATED கொரோனா சிறப்பு ஊதியம்; பாதுகாப்பு...