வரலாற்றுச் சிறப்புமிக்க வைகையை கூவம் ஆக்கலாமா? ஒரு கோடி லிட்டர் கழிவுநீர் ஆற்றில் தினமும் கலக்குது

* 5 லிட்டர் ரசாயனமும் கலப்பதாக நதி ஆர்வலர்கள் வேதனை

மதுரை : வைகை ஆற்றில் தினமும் கலக்கும் ஒரு கோடி லிட்டர் கழிவுநீரில், 5 லட்சம் லிட்டர் ரசாயனம் கலந்து நீர் நுரையாக பொங்குகிறது. இதில் கொசு உற்பத்தியாகி மர்மக் காய்ச்சலும் பரவுகிறது. வைகை ஆற்றின் படுகை மதுரை நகரில் கோச்சடை முதல் அண்ணாநகர் வரை 10 கிமீ தூரம் உள்ளது. இதில் பாதாளச்சாக்கடை மற்றும் கழிவுகள் அதிக அளவில் கலந்து கூவமாக மாறி வருகிறது. மதுரை நகர் பகுதியில் 45 இடங்களில் கழிவு நீர் கலப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால் ஆற்றின் மாசுபாடு அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர்மேம்பாடு என்ற நோக்குடன் மதுரை நகர் பகுதியில் ஏ.வி மேம்பாலம், ஓபுளா படித்துறை தரைப்பாலம் அருகில் இரு தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் கழிவுநீர் தெப்பமாக தேங்கி நிற்கிறது. இதில் கொசு உற்பத்தியாகி நகருக்குள் பரவி வருகிறது. இதனால் மதுரையில் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 3 நாட்களாக மதுரையில் மழையே பெய்யாத நிலையில் தடுப்பணையை தாண்டி சிறிது தூரத்தில் அமைந்துள்ள குருவிகாரன்சாலை பாலத்தில் நேற்று கழிவுநீர் நுரையாக பொங்கி வழிந்தது. தினமும் வெளியேறும் கழிவு நீரில் இம்மாதிரி நுரை உண்டாவதில்லை. ரசாயன கழிவு கலந்ததால் நுரை தள்ளுவதாகவும் இந்த ரசாயன கழிவு அரசு மருத்துவமனையில் இருந்து ஆற்றில் கலப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

சமீபத்தில் நடத்திய ஆய்வில், மாநகராட்சி தினமும் 98 லட்சம் லிட்டர் பாதாள சாக்கடை நீரை ஆற்றில் கலக்கிறது. இதுதவிர 5 லட்சம் லிட்டர் மருத்துவ கழிவுநீர், 20 லட்சம் லிட்டர் குளிக்கும் நீர் ஆற்றில் சங்கமம் ஆகிறது. இதுதவிர மருத்துவ கழிவுகளும் கலக்கின்றன. இதனால் ஆற்றில் நச்சு தன்மை அதிகரித்து, குடிநீரும், நிலத்தடி நீரும் கடும் பாதிப்பு அடைகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ‘‘ஆற்றில் அசுத்தம் செய்தால் அபராதம் விதிக்கப்படும். கொசு உற்பத்தியாகும் வகையில் கட்டிடங்களில் கழிவுநீரை தேக்கிவைத்தால் அபராதம்’’ என்பது மாநகராட்சியின் எச்சரிக்கை. ஆனால் ஆற்றில் மாநகராட்சியே பாதாள சாக்கடையை கலக்க செய்கிறது, இதற்கு யாருக்கு யார் அபராதம் விதிப்பது என்ற விமர்சனம் மக்கள் மத்தியில் பூதாகரமாக எழுந்துள்ளது.

வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறும்போது, ‘‘ஆற்றை மாசுபாட்டில் இருந்து காக்க தொடர்ந்து குரல் எழுப்பியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதேநிலை நீடித்தால் ஆற்றின் கதி படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டு, இரு பக்கமும் நிலத்தடி நீரையும் மாசுபடுத்தும் அபாயம் உருவாகும்’’ என வேதனையை வெளிப்படுத்தினர்.

Tags : Vaikom ,river ,madurai ,mixing ,Vaigai River Sewage Water , Vaigai River,Sewage Water,madurai
× RELATED பிளாஸ்டிக், சாக்கடை கழிவுகளால் புதர்மண்டி கிடக்கும் பேபி கால்வாய்