×

தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் 8, 9ம் வகுப்பு படிக்கும் 4,560 மாணவர்களை வெளிமாநிலங்களுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு

*மைசூர், ஐதராபாத் உள்பட 4 இடங்களுக்கு களப்பயணம்

சேலம் :தமிழக அரசு பள்ளிகளில், 8, 9ம் வகுப்புகள் படிக்கும் 4,560 மாணவர்களை, மைசூர், ஐதராபாத், திருப்பதி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு களப்பயணம் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் வாயிலாக 2019-20 கல்வியாண்டில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் நேரடி களப்பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென ஒரு கல்வி மாவட்டத்திற்கு 30 மாணவர்கள் வீதம், 120 கல்வி மாவட்டங்களில் உள்ள 3,600 மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

 இதில், மாணவர் ஒருவருக்கு ₹2 ஆயிரம் வீதம், ₹72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வெளிமாநில நிறுவனங்களை பார்வையிடும் நிகழ்வினை, மத்திய அரசு நிறுவனமான ஐஆர்சிடிசி உடன் இணைந்து, நடப்பு மாதம் முதல் பிப்ரவரி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தொடக்கக்கல்வியில் 8ம் வகுப்பு பயிலும், ஒரு மாவட்டத்திற்கு 30 மாணவர்ள் வீதம், 32 மாவட்டத்திற்கு 960 மாணவர்களையும் தேர்வு செய்து, அவர்களுடன் அழைத்து செல்ல வேண்டும்.

அதன்படி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டத்தினர் கர்நாடக மாநிலம் மைசூருக்கும், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தினர்  தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கும்,  கோவை, திண்டுக்கல் உள்பட 12 மாவட்டத்தினர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கும், அரியலூர், கடலூர் உள்பட 10 மாவட்டத்தினர் ஆந்திர மாநிலம திருப்பதிக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். பயண தேதி, நேரம் மற்றும் இதர விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “வெளிமாநில களப்பயணத்திற்கு, உடல்நலம் குன்றிய மாணவ, மாணவியரை அழைத்து செல்ல கூடாது. தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் கடிதத்தை பெற வேண்டும். களப்பயணம் மேற்கொள்ளும் இடங்களை பற்றிய விவரங்களை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். களப்பயணம் சார்ந்த புகைப்படம், மாணவர்களது அனுபவம் பற்றிய வீடியோ மற்றும் தொகுப்பினை ெபற வேண்டும். 20 மாணவர்களுக்கு ஒரு கணித அல்லது ஒரு அறிவியல் ஆசிரியர் வீதம் உடன் செல்ல வேண்டும். மேலும், மாணவிகளும் செல்வதால் கண்டிப்பான பெண் ஆசிரியரும் உடன் செல்ல வேண்டும்.

மாணவர்களுடன் செல்லும் ஆசிரியர்கள் இரவு நேரத்தில் பயணிக்கும் போதும், இரவில் தங்கும் போதும், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மாணவ, மாணவிகள் தனியாக எங்கும் செல்லவோ, வாகனங்களை விட்டு தேவையின்றி இறங்கவோ அனுமதிக்க கூடாது. மாணவர்களின் பாதுகாப்பிற்கு உடன் செல்லும் ஆசிரியர்களே முழு பொறுப்பாவர். மாணவர்கள் கண்டிப்பாக பள்ளி சீருடைகளை மட்டுமே அணிய வேண்டும். பள்ளி ஐடி கார்டு, 3 நாட்களுக்கு தேவையான சீருடைகள் மற்றும் மாற்று உடைகள், அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை எடுத்து வர வேண்டும். விலை உயர்ந்த பொருட்கள், ஆபரணங்களை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். தேவையான மருந்து பொருட்கள் அடங்கிய முதலுதவி பெட்டியை உடன் எடுத்து செல்ல வேண்டும்,” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : government schools ,Tamil Nadu ,tour ,9th Goverment School 8th ,Mysore ,Hyderabad , Mysore ,hyderabad,Goverment School,salem,Mysore ,hyderabad
× RELATED அங்கன்வாடி குழந்தைகள் விவரங்களை...