×

குறையாத ஜிஎஸ்டி வரி கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தி கடும் பாதிப்பு

*ஏமாற்றம் அடையும் உற்பத்தியாளர்கள்

கோவில்பட்டி : தீப்பெட்டிக்கு 18 சதவீதம் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி இதுவரை குறைக்கப்படாததால் நாளுக்கு நாள் தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் வரி குறையும் என எதிர்பார்க்கும் உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. தமிழகத்தை  பொறுத்தவரை தட்ப வெப்பநிலை சீராகவும், அதிக வெப்பம் மிகுந்த பகுதியில்தான்  தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் நடந்து வருகிறது. குறிப்பாக  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு, கழுகுமலை, கடலையூர், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், விருதுநகர்  மாவட்டம் சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஏழாயிரம்பண்ணை, தர்மபுரி மாவட்டம்  காவேரிப்பட்டினம், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதிகளில் ஆரம்ப காலத்தில்  கைகளினால் செய்யப்பட்டும் தீப்பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டன.

காலப்போக்கில் அறிவியல் மற்றும் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால் தீப்பெட்டி  தொழில் இயந்திரமயமானது. தமிழகத்தில் பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் முழு இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் செயல்பட துவங்கியது. தூத்துக்குடி,  நெல்லை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம்,  தர்மபுரி மாவட்டம் காவேரிபட்டினம் ஆகிய இடங்களில் 300 பகுதி இயந்திர  தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 50 முழு இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும்  இயங்குகின்றன. இத்தொழிற்சாலைகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  நேர்முகமாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இதில் குறிப்பாக 80 சதவீதம் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.    தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான  தீப்பெட்டி பண்டல்கள் குஜராத், டில்லி, ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப்,  மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களுக்கு  லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி சென்னை, தூத்துக்குடி போன்ற  துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளுக்கும் தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றுமதி  செய்யப்படுகிறது.

தீப்பெட்டி தொழிலை  சார்ந்து  மூலப்பொருட்கள், அச்சகங்கள், பேப்பர், அட்டை கம்பெனிகள், மரக்குச்சி  கம்பெனிகள் செயல்படுகிறது.      தீப்பெட்டி தயாரிப்பிற்கு தேவையான  மரத்தடிகள் கேரளா போன்ற பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு மரக்குச்சி தயாரிப்பு தொழிற்சாலைகளில் தீக்குச்சிக்கான  சிறுசிறு மரக்குச்சிகளாக தயாரிக்கப்பட்டு தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு  விற்கப்படுகிறது. தீப்பெட்டிக்கு தேவையான காகித அட்டைகள்,  தீப்பெட்டிக்கான மேல்பெட்டிகள் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் இருந்து  வாங்கப்படுகின்றன.

தீப்பெட்டி தொழிலை நீண்ட காலமாக செய்து வரும்  வடமாநிலத்தைச் சேர்ந்த பெரும்பாலான குடும்பங்கள் தமிழகத்தில் பெரும்பாலான  இடங்களில் வசித்து வருகின்றனர். தீப்பெட்டி உற்பத்திக்கு  தேவையான முக்கிய மூலப்பொருட்களான வஜ்ஜரம், மெழுகு, பொட்டாசியம்குளோரைட்,  மரக்குச்சி, அட்டைகள்,  பேப்பர் போன்றவைகளின் விலை பல மடங்கு  உயர்ந்துள்ளது. டீசல் விலை உயர்வால் லாரி வாடகையும் உயர்ந்துள்ள நிலையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், முழு இயந்திர தீப்பெட்டி  தொழிற்சாலை மற்றும் பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு மத்திய  அரசு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது.

   தற்போது  வடமாநிலங்களில் இயந்திரங்கள் மூலம் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள்  வந்து விட்டதால், தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கான தீப்பெட்டி  பண்டல்களின் கொள்முதல் குறைந்து விட்டது. வடமாநிலங்களில் இயந்திரம் மூலம்  தீப்பெட்டிகள் தயாரித்து குறைந்த விலைக்கு விற்கின்றனர். தமிழகத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகளில்  தீப்பெட்டி உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், அதற்கான உற்பத்தி செலவு  அடக்கவிலை கூட கிடைக்கவில்லை என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

 தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை உயர்வு,  தொழிலாளர்கள் பற்றாக்குறை, வடமாநிலங்களில் இயந்திர தீப்பெட்டி  தொழிற்சாலைகள் வருகை, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு போன்ற பல்வேறு  காரணங்களால் தமிழகத்தில் பிரதான தொழிலான தீப்பெட்டி ஆலைகள்  அழிவை நோக்கி செல்கின்றன என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேதனை  தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய  அரசு தீப்பெட்டிக்கு விதித்த 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய  அரசிடம் பலமுறை வலியுறுத்தியும், இதுவரையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில்  கூட்டங்களில் எந்த நடவடிக்கை இல்லை. சமீபத்தில் கோவாவில் நடந்த 37வது ஜிஎஸ்டி கவுன்சில்  கூட்டத்திலாவது தங்களது கோரிக்கை நிறைவேறும் என தமிழக தீப்பெட்டி  உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்தனர்.  ஆனால் தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படாததது தமிழக  தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை  அளித்துள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி தீப்பெட்டி தொழிலாளர் மாரியம்மாள் கூறுகையில்; தீப்பெட்டி தொழி லை நம்பி என்னை போல் ஏராளமான பெண்கள் குடும்பத்தை  நடத்தி  வருகின்றனர். தற்போதைய விலைவாசி உயர்வால் ஒரு குடும்பத்தில் கணவன்,  மனைவி  இருவரும் உழைத்தால் தான் பிள்ளைகளை படிக்க வைக்க முடியும், பெண்   பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியும். ஆனால் கடந்த காலங்களில் ஒரு   தீப்பெட்டி ஆலையில் பெண்கள் மட்டும் 150 பேர் பணியாற்றி வந்தனர். ஆனால்  இன்று 10 முதல் 20 பெண்கள் மட்டுமே வேலை  பார்க்கின்றனர். தீப்பெட்டி  தொழிலுக்கு வரி  விதிக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க  முடியவில்லை.  பிரதமர் மோடியின் இந்த ஆட்சியில் தீப்பெட்டி தொழிலுக்கு  வரியை விதித்து தொழிலை நலிவடைய செய்து விட்டனர், என்றார்.     

கோவில்பட்டி நேஷனல் சிறுதீப்பெட்டி  உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், தீப்பெட்டி  தொழிற்சாலைகளுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 6 சதவீதமாக  குறைக்கக் கோரி  மத்திய, மாநில அரசுகளை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்  சங்கத்தினர் பலமுறை  வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. மத்திய அரசு  பலமுறை நடத்திய ஜிஎஸ்டி வரி  விதிப்பு கவுன்சில் கூட்டத்தில்  தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க  வேண்டும் என வலியுறுத்தியும் கண்டு  கொள்ளவில்லை.  தீப்பெட்டி  உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை  உயர்வு, லாரி வாடகை உயர்வு,  வடமாநிலங்களில் இருந்து ஆர்டர் இல்லாமை போன்ற  காரணங்களால் தீப்பெட்டி  தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு சிட்கோ மூலம்  தீப்பெட்டிக்கான மூலப்பொருட்களை வழங்க  வேண்டும். மத்திய அரசின் ஜிஎஸ்டி  வரியை 18ல் இருந்து 6 சதவீதமாக குறைக்க  வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட  வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி  வழங்க வேண்டும், என்றார். மத்திய அரசு பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை அவ்வப்போது நடக்கும் கவுன்சில் கூட்டங்களில் குறைத்துள்ளது. அதுபோல தீப்பெட்டிக்கும் ஜிஎஸ்டி வரியை குறைத்தால் மட்டுமே அந்த தொழிலை பாதுகாக்க முடியும்.

வரியை குறைத்தால் மட்டுமே தீர்வு

தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் சுரேஷ் கூறியதாவது;  தீப்பெட்டிக்கான 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை 6 சதவீதமாக குறைக்க வேண்டும் என  மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படவில்லை. தீப்பெட்டி மூலப்பொருட்களான  குச்சி, அட்டை, பேப்பர் போன்றவைகளுக்கு 12 சதவீதம் தான் ஜிஎஸ்டி வரி உள்ளது.  ஆனால் தீப்பெட்டிக்கு மட்டும் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.  மூலப்பொருட்களுக்கு என்ன வரி விதிக்கப்பட்டுள்ளதோ, அதேதான் தயாரிப்பு  பொருட்களுக்கும் இருக்கும்.

ஆனால் தீப்பெட்டிக்கு மட்டும்தான் இரு  மடங்காக வரி செலுத்தி வருகிறோம். இதனால் தமிழத்தில் தீப்பெட்டி  தொழிற்சாலைகள் அனைத்தும் நலிவடைந்து வருகிறது. தொழிலாளர்களுக்கு ஊதியம்  அளிக்க முடியாத காரணத்தால் தொழிலாளர்கள் வேறு தொழில் மாறி  சென்று விட்டனர். இந்த நிலை நீடித்தால் தீப்பெட்டி தொழில் முற்றிலும்  நலிவடைந்து விடும். ஜிஎஸ்டி வரியை குறைத்தால் மட்டுமே தீப்பெட்டி  தொழிலுக்கான பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க முடியும் என்றார்.


Tags : GST ,Kovilpatti Near Kovilpatty , Kovilpatty ,Matchbox ,GST,heavily Damaged
× RELATED திருப்பூரில் ஜிஎஸ்டி வரி குறித்து...