×

மும்பை மெட்ரோ ரயில் பணிக்காக ஆரே காடுகளில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு உச்சநீதிமன்றம் தடை

மும்பை: மும்பை மெட்ரோ ரயில் பணிக்காக ஆரே காடுகளில் உள்ள மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆரே காடுகளை வெட்ட அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மும்பையின் கொலபா-பாந்திரா- சாந்தாகுரூஸ் இடையே செயல்படுத்தப்படும் 3-வது மெட்ரோ வழித்தடத்தின் பணிமனையை, நகரின் நுரையீரல் என்றழைக்கப்படும் ஆரே காலனி பகுதியில் அமைக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்தது. அங்கு சுமார் 3 ஆயிரம் மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான பொதுநல மனுக்களை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, மரங்கள் வெட்டும் பணியை மெட்ரோ ரயில் நிறுவனம் வெள்ளிக்கிழமையன்று தொடங்கியது. அங்குகூடிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, மரங்கள் வெட்டும் பணியைத் தடுத்து நிறுத்தவும் முயன்றனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்திய நிலையில், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மரங்கள் வெட்டுவதை தடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட 29 பேர், போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் தலா 7 ஆயிரம் ரூபாய் ஜாமீனில் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே, ஆரே பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு மாணவர்கள் குழு கடிதம் அனுப்பி இருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில் இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மும்பை மெட்ரோ ரயில் பணிக்காக ஆரே காடுகளில் உள்ள மரங்களை வெட்ட தடை விதித்தனர். உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து மேலும் மரங்களை வெட்டமாட்டோம் என்று மராட்டிய மாநில அரசு உறுதி அளித்துள்ளது.

முன்னொரு காலத்தில் ஆரே வட்டாரம் காடாக இருந்திருக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நள்ளிரவில் மரங்களை வெட்டியதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 29 பேர் விடுவிக்கப்பட்டனர். இதுவரை எத்தனை மரங்கள் வெட்டப்பட்டன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல் குறித்து நாங்களும் அக்கறை கொண்டுள்ளோம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Supreme Court ,forest ,Mumbai Metro ,Aare ,Aare Forest , Mumbai, Metro Rail Service, Supreme Court, Prohibition
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...