×

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரியில் நீர்திறப்பு 20,000 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரியில் நீர்திறப்பு 20,000 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளதால், நீர்மட்டம் 118.20 அடியாக சரிந்துள்ளது. தமிழக-கர்நாடக எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதை பொறுத்து, ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 14 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.

இருந்தாலும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிப்பதற்கும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 19,333 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 11,882 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை முதல் 700 கனஅடியாக நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 118.71 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 118.20 அடியாக சரிந்தது. நீர்இருப்பு 90.64 டிஎம்சியாக உள்ளது. இந்நிலையில் இன்று கூடுதலாக 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவர படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 11,882 கன அடியில் இருந்து 10,031 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 117.50 அடியாக உள்ளது. நீர் இருப்பு 89.69 டிஎம்சியாக உள்ளது. அணையின் மேற்கு கால்வாய்க்கு 700 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Tags : Mettur Dam ,Kaveri , Mettur Dam, Delta Irrigation, Cauvery, Hydrology, Increase
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!