×

விவசாயம் செழிக்க, ஒற்றுமை நிலைக்க ஆண்கள் மட்டும் திரண்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை: கறி விருந்துடன் கமுதி அருகே திருவிழா

சாயல்குடி: கமுதி அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி ஆண்கள் மட்டும் அம்மனை வழிபடும் திருவிழா நேற்று முன்தினம் இரவு கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள முதல்நாடு, புதுக்குளம் கண்மாயில் கிராம எல்லையை காக்கும் தெய்வமாக எல்லைபிடாரி அம்மன் கோயில் உள்ளது. மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் முதல்நாடு ஆண்கள் சார்பாக ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழா நடந்து வருகிறது.  இந்தாண்டு திருவிழாவிற்காக, 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டப்பட்டது.

திருவிழா நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு, கன்னிப்பெண் வடிவில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பீடத்தில் வீற்றிருந்த அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் நூற்றுக்கணக்கான ஆடு, சேவல், கிடாய்கள் அம்மனுக்கு பலியிடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். நேற்று காலை கிராமத்தினரின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக, ஒரே சமையல் செய்யப்பட்டு, சமபந்தி கறி விருந்து நடந்தது. சோறு உருண்டையாக உருட்டப்பட்டு பொது அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பெண்கள் கலந்து கொள்ளவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

Tags : pooja ,Amman ,men ,party ,festival ,Curry ,Kamuthi , agriculture, sustain , Amman,Kamuthi ,curry party
× RELATED வேதாள முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்