×

4 ஆண்டுக்கு முன் பெங்களூரு கொண்டு செல்லப்பட்ட கீழடி தொல்பொருட்கள் நிலைமை என்ன?: தமிழார்வலர்கள் கேள்வி

மதுரை: கீழடியில் நடந்த முதற்கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்டு 4 ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் ஆய்வு நடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட 7 ஆயிரம் தொல்பொருட்கள் ஆபத்தின்றி மீண்டும்  கீழடி திரும்புமா என்ற அச்சம் தமிழ் ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.   தமிழர் நாகரீக தொன்மையை உலகுக்கு பறைசாற்றிய கீழடிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். 2,600 ஆண்டுகளுக்கு முன்பாகவே நகர நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழர்களின் கட்டிடக்கலை, தொல் பொருட்களை கண்டு பிரமித்துச் செல்கின்றனர்.  மத்திய அரசின் தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன், 2014, 2015ல் வைகை நதிக்கரை கீழடியில் நடத்திய ஆய்வில் கிமு 2ம் நூற்றாண்டிலேயே இங்கு நகர நாகரீகம் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள்  எடுக்கப்பட்டன. இந்த அகழாய்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. உடனடியாக அந்த அகழாய்வை தொடர அனுமதிக்காமல் மத்திய அரசு நிறுத்தியது.

தொன்மையின் நிஜத்தை ஆய்வின் மூலம் நிரூபிக்க தயாரான அகழாய்வு அதிகாரி அசாம் மாநிலத்துக்கு தூக்கியடிக்கப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமானதும், 
ராமன் என்ற அதிகாரியை மத்திய தொல்லியல் துறை நியமித்து ஆய்வு நடத்தியது. அந்த அதிகாரி பெயரளவுக்கு சில ஆய்வு நடத்தினார். ‘கீழடியில் அகழாய்வு தொடர தேவையில்லை’ என்று அறிக்கையும் அளித்தார். ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து, தமிழக அரசின் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. இதன் நான்காம் கட்ட ஆய்வில், தமிழர்கள் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே நகர நாகரீகத்துடன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டன.   இங்கு அகழாய்வில் எடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்து கல்வெட்டு, அணிகலன்கள் உள்ளிட்ட தொல் பொருட்கள் தமிழக அரசின் தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ளது. கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து காட்சிக்கு வைக்க வேண்டும், அந்த பகுதியை ‘சங்க கால வாழ்விடம்’ ஆக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. தமிழக அரசின் ஆய்வறிக்கை மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் தொல்லியல் துறை மவுனம் சாதித்து வருகிறது.

கீழடியில் முதன்முதலில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வில் எடுக்கப்பட்ட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் அங்கிருந்து தூக்கிச் செல்லப்பட்டு, பெங்களுரூ, சென்னையில் சீல் வைத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. அவற்றை எடுக்கவும் ஆய்வறிக்கை தயாரிக்கவும் பெங்களுரூவிலுள்ள மத்திய தொல்லியல் துறை அதிகாரிக்கு 4 ஆண்டுக்கு முன் அதிகாரம் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆய்வறிக்கை இதுவரை வெளியாகவில்லை. ஆதிச்சநல்லூரில் நடத்திய அகழாய்வுக்கு ஆய்வறிக்கை தயாரிக்காமல் மூடி மறைத்தது போல், கீழடியில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு நடத்தி ஆய்வறிக்கை தயாரித்து வெளியிடாமல் கிடப்பில் போட்டுவிடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சூழலில் பெங்களூருவிலுள்ள கீழடி தொல்பொருட்கள் சேதாரம், ஆபத்தின்றி மீண்டும் கீழடிக்கு வந்து சேருமா என்ற அச்சம் தமிழ் ஆய்வாளர்கள் மத்தியில் தலைதூக்கி உள்ளது.

ஜனவரியில் 6ம் கட்ட ஆய்வு
தமிழக அரசின் தொல்லியல் துறை நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியிட்டு முடித்து, ஐந்தாம் கட்ட ஆய்வு நடத்தி வருகிறது. தற்போது, ஆறாம் கட்டமாக 2020, ஜனவரியில் கீழடி அருகே மணலூர், கொந்தகை, அகரம் கிராமங்களிலும் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. கீழடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் அகழாய்வுக்கு திட்டமிடப்பட்ட இடம் 110 ஏக்கர். இதில் 5 சதவீதம் முக்கியமான பகுதிகளில் அகழாய்வு முடிந்துள்ளது. வைகை நதிகரையில் மட்டும் 293 இடங்கள் ஆய்வுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.

Tags : Bangalore ,Tamils , Transported,status , archeology,Tamils
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...