×

சிங்கப்பூரில் கூட 9 பேர் இறந்துள்ளனர் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

நாகர்கோவில்: கன்னியாகுமரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 3.60 கோடியில் இதய நோயாளிகளுக்கான கேத்-லேப் திறப்பு உள்பட 21 கோடி மதிப்பில் புதிய திட்டங்களின் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பங்கேற்று கேத் லேப்பை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை, தர்மபுரி, விழுப்புரம் மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் 2, 3 நாட்கள் வரை காத்திருக்காமல், உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சுயமாக மருந்து, மாத்திரைகளை வாங்கி உட்கொள்ள கூடாது. தமிழகத்தில் இதுவரை டெங்கு பாதிப்புக்கு உயிரிழப்புகள் இல்லை. தெலங்கானாவில் சமீபத்தில் 10 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிங்கப்பூரில் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு கடந்த மாதம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் உயிரிழப்புகள் இல்லை.

தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதுவரை 27,777  பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. விரைவில் 500 டாக்டர்கள், 2,345 நர்ஸ்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு விரைவில் முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்குவார். மருத்துவ கல்லூரிகளில் டாக்டர்களின் பணியிடங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் தகவல் உண்மையல்ல. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.  மருத்துவத்துறையில் கேரளாவையும், தமிழகத்தையும் ஒப்பிடக்கூடாது. கேரளாவில் 70 சதவீத பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன. தமிழகத்தில் 70 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில்தான் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : deaths ,Tamil Nadu ,Minister Vijayabaskar , Singapore, died, Tamil Nadu, Minister Vijayabaskar
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...