அதிக அதிர்வுகள் ஏற்படுத்தும் வாத்தியங்களுக்கு தடை போலீசாருடன் பக்தர்கள் திடீர் தள்ளுமுள்ளு: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பரபரப்பு

உடன்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்தும் வாத்தியங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வழக்கமாக கோயிலுக்கு வரும் தசரா குழுவினர் தாரை, தப்பட்டைகள் ராட்சத டிரம்ஸ் மற்றும் அதிக அதிர்வுகளை ஏற்படுத்தும் பேண்ட்செட், ராஜமேளம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாத்தியங்களுடன் ஆரவாரம் செய்வர். இதனால் கோயில் பகுதியில் போலீசார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் அறிவிக்கும் அறிவிப்புகள் பக்தர்களுக்கு கேட்பதில்லை. அதிகமான சப்தத்தால் பக்தர்கள், முதியவர்கள், குழந்தைகள் கடுமையான பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதையொட்டி திருவிழாவிற்கு முன்னர் நடந்த தசரா குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கோயில் வளாக பகுதியில் அம்மனுக்கு உகந்த மேளங்களை தவிர மற்ற வாத்தியங்களை வாசிக்க கூடாது, பக்தர்கள் வாள், ஈட்டி, கத்தி உள்ளிட்ட இரும்பினாலான ஆயுதங்கள் கொண்டு வரக்கூடாது என போலீசார், கோயில் நிர்வாகத்தினர் தடை விதித்தனர். இந்நிலையில் தசரா கொடியேற்ற முதலாம் திருவிழாவில் இருந்தே போலீசார்  ராஜமேளத்தை மட்டுமே அனுமதித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திசையன்விளை பகுதியில் இருந்து வந்த தசரா குழுவினர் போலீசாரின் எச்சரிக்கை மற்றும் தடுப்புகளை மீறி அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய வாத்தியங்களை இசைத்து போலீசாரை தள்ளிவிட்டு கோயிலுக்குள் செல்ல முயன்றனர். அவர்களை மீண்டும் தடுக்கவே பக்தர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு திரண்ட பக்தர்கள் போலீசாரை அவதூறாக பேசி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். போலீசாரின் எச்சரிக்கையை மீறி சென்று மகாமண்டபத்தின் உள்ளேயும் வாசிக்க தொடங்கினர். இதனால் போலீசார் -பக்தர்களிடையே மீண்டும் மோதல் உருவானது. அரை மணி நேரத்திற்கும் மேலாக கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.அதன்பிறகு கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரம் ஊர்வலமாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்தது. இதையடுத்து போலீசாரின் எச்சரிக்கையை மீறிய தாரை தப்பட்டை, தசரா குழுவினர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

Related Stories:

>