×

மத்திய பிரதேசத்தில் லாரிகள் ஸ்டிரைக் தானிய வகைகள் வரத்து சரிவு விலை உயரும் அபாயம்

சேலம்: மத்திய பிரதேசத்தில் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், தமிழகத்திற்கு தானிய வகைகள் வரத்து சரிந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால், விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சேர்மன் குல்கரன்சிங் அத்வால், தலைவர் மிட்டல் ஆகியோர், அனைத்து மாநில, மாவட்ட லாரி உரிமையாளர் சங்கங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் மத்திய பிரதேச லாரி உரிமையாளர் சங்கம், பெட்ரோல் டீசலுக்கு 5 சதவீத வாட் வரி உயர்த்திய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், புது, பழைய வாகன ஆயுட்கால சாலை வரியை உயர்த்தியதை திரும்ப பெறக்கோரியும், நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளது. இதற்கு, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் முழு ஆதரவை தெரிவித்துள்ளது. அதனால் போராட்டத்தை வலுப்படுத்த, மாநில, மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம், மத்திய பிரதேசத்துக்கு லாரிகளை இயக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:தமிழகத்தில் இருந்து, வாரத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மத்திய பிரதேசத்திற்கு இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து ஸ்டார்ச், ஜவ்வரிசி, இரும்பு தகடு, கம்பி, கோழிதீவனம் உள்பட பலவகையான பொருட்கள் மத்திய பிரதேசத்திற்கு செல்கின்றன. அங்கிருந்து துவரம்பருப்பு, கொண்டைக்கடலை, பூண்டு, தானிய வகைகள், பெரிய வெங்காயம் உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் தமிழகத்திற்கு வருகின்றன. மத்திய பிரதேசத்தில் லாரிகள் வேலைநிறுத்தத்தால், தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகள் மத்திய பிரதேசம் வழியாக செல்லாமல், வேறு மாநிலத்தை சுற்றிக்கொண்டு உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றன.

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக மத்திய பிரதேசத்தில் இருந்து வரவேண்டிய தானிய வகைகள், பருப்பு வகைகள், பூண்டு உள்பட பல்வேறு பொருட்கள் வருவது தடைபட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பருப்பு, தானிய வகைகள் தேவை அதிகரித்துள்ளது. 2 நாள் வேலை நிறுத்தம் காரணமாக பல ஆயிரம் டன் பருப்பு, தானிய வகைகள் வரவில்லை. இது தொடர்ந்தால் பருப்பு, தானிய வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் அபாயத்தில் உள்ளது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சென்னகேசவன் கூறினார்.

Tags : Madhya Pradesh , Lorry Strike, Madhya Pradesh,prices
× RELATED விபத்தில் லாரி எரிந்து கொண்டிருந்த...