×

சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிர்ப்பு பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லையை நோக்கி பேரணி

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதி வரை ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) பேரணி நடத்தியது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், இம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்பிரச்னையை சர்வதேச அளவில் கொண்டு சென்று ஆதரவு திரட்ட முயற்சித்தும் வருகிறது. ஆனால், இந்தியாவின் தூதரக வியூகங்களால் இது தோல்வி அடைந்து விட்டது.

இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிர்ப்பு, தெரிவித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி சார்பில் எல்லைக்கட்டுப்பாடு கோடு வரை நேற்று பேரணி நடத்தப்பட்டது. இதில், ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். நேற்று முன்தினம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாபராபாத்தில் இருந்து தொடங்கிய பேரணி, இரவில் கார்ஹி துப்பட்டாவில் முடிந்தது. அங்கு இரவு தங்கிய போராட்டக்காரர்கள், நேற்று காலை எல்லைக்கட்டுப்பாடு கோடு வரை பேரணி சென்றனர். ஜேகேஎல்எப் தலைவர் ரபீக் தார் கூறுகையில், “இந்தியா, பாகிஸ்தானை சேர்ந்த ஐநா ராணுவ கண்காணிப்பு குழுவினர் எங்களை தொடர்பு கொண்டனர். மேலும், போராட்டக்காரர்கள் மீது படைகளை ஏவி தாக்குதல் நடத்த வேண்டாம் என இருநாட்டையும் அறிவுறுத்தியுள்ளது,” என்றார்.

எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியை தாண்டி செல்லப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர். ஆனால், அவர் சகோதி பகுதியில் தடுத்து நிறுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ‘காஷ்மீர் மக்களுக்கு உதவும் எண்ணத்தில் யாரும் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை தாண்டி செல்ல வேண்டாம்,’ என நேற்று முன்தினம் அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : border ,Kashmir , Opposition, elimination , special statu,Kashmir Marching,border
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது