×

தமிழக இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறி: ரவிக்குமார், எம்பி

அண்மைகாலமாக பாஜ ஆட்சி செய்யும் மாநிலங்கள் பலவற்றில் மாநில வேலைவாய்ப்புகளில் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்குவதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் அப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மாநில அரசு வேலை வாய்ப்புகளும் பிற மாநிலத்தவருக்கு திறந்து விடப்படுகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் வட மாநிலத்தவர் கொண்டு வந்து குவிக்கப்படுகின்றனர்.  போதாக்குறைக்கு மாநில அரசும் தனது கதவுகளை திறந்து வைத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2ம் தேர்வில் முதல் நிலை தேர்வில் மொழிப்பாடம் அகற்றப்பட்டு இருப்பது பிற மாநிலத்தவர்கள் வேலையை வந்து அபகரிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் எந்த ஒரு மாநில அரசு பணிகளுக்கும் பிற மாநிலத்தவர் பங்கேற்க முடியாது என்ற தடை இல்லை. இதனால், இங்கே படித்து முடித்து வேலை வாய்ப்புக்கு காத்திருக்கும் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.  பிற மாநிலங்களில் தமது மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் போது, நமது மாநில அரசு அது பற்றி கவலைப்படாமல் மத்தியில் ஆளும் பாஜவினர் திருப்திபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதனால், தான் மக்கள் தமது உரிமைகளை பாதுகாத்து கொள்வதற்காக தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி போராடும் போது அவர்களை எல்லாம் குறுகிய நோக்கம் ெகாண்டவர்களாகவும், பிரிவினை வாதிகளை போலவும் பாஜவினர் அதன் பரிவாரங்களும் சித்தரிக்கின்றனர்.

நாம் போராடுவது, நம்மை தற்காத்து கொள்வதற்காக தான். ஆக்கரமிப்பில் இருந்து தமிழகத்தை காப்பாற்றி கொள்ளதான். இதை பிரிவினைவாதம் என்று கூறுபவர்கள் தமிழக நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்தி மொழி ஆதிக்கம் எல்லா தளங்களிலும் வழிந்து திணிக்கப்படுகிறது. மத்தியில் ஆட்சி மொழிகளில் ஒன்றான தமிழை ஆக்க வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதுவரை மத்திய அரசால் பரிசீலிக்கப்படவே இல்லை. அரசியலமைப்பு சட்டத்தில் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் மத்தியில் ஆட்சி மொழிகளாக்க வேண்டும்.  அதுமட்டுமின்றி மேலும் 38 மொழிகள் தம்மை 8வது அட்டவணையில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்து காத்திருக்கின்றன. அதையும் சேர்க்க வேண்டும். தமிழகம் கோரியது சுயநலன் அடிப்படையிலான கோரிக்கை அல்ல. அது ஜனநாயகத்துக்கான கோரிக்கை. அதனால் தான் அனைத்து மொழிகளையும் அங்கீகரிக்க வேண்டும் என்று  கோருகிறோம். ஆனால், ஆட்சியில் உள்ளவர் இந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர்.

இந்திக்கு கொடுக்கும் முன்னுரிமை என்பது அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 351ன் மூலம் வழங்கப்படுகிறது. அந்த பிரிவு உருவாக்கப்படும் போது, மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படவில்லை. 1956ம் ஆண்டுக்கு பிறகு தான் மாநிலங்கள் மொழி அடிப்படையில்  மறுசீரமைப்பு செய்யப்பட்டன. எனவே, இந்திக்கு முன்னுரிமை அளிக்கும் 351யை திருத்த வேண்டும். இந்த கோரிக்கையை தமிழகம் வலுவாக எழுப்ப வேண்டும். நாம் தற்காப்பு போராட்டத்தில் மட்டுமே நடத்தி கொண்டிருப்பதால் நம்மை பலவீனமானவர்கள் என்று இந்தி ஆதிக்கவாதிகள் கருதுகின்றனர். எனவே, நாம் முன்னோக்கி நகர வேண்டும். நமது கோரிக்கைகள் இன்னும் வலுவாக உலக அரங்கில் எடுத்துரைக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் தான் தமிழை பாதுகாக்க முடியும்.மத்தியில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை  ஆக்க வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக சட்டமன்றத்தில் ஒரு  மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதுவரை மத்திய அரசால் பரிசீலிக்கப்படவே  இல்லை.

Tags : The Ravikumar ,Tamil Nadu ,MB , youth, Tamil Nadu, Future Questionnaire, Ravikumar, MB
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...