×

தமிழர் நலன்களை காக்க அரசு தயங்கியதே இல்லை: மா.பா.பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்

தமிழ் மொழிக்கும் தமிழர் நலனுக்கும் அரசு எப்போதும் பாதுகாப்பு அரணாகவே இருந்து வருகிறது. கீழடியில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சியின் மூலம் அதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். பழம் பண்பாடு, நாகரிகம், வாழ்வியல் முறைகளில் பல புதிய பார்வைகளை கொடுக்கும் வகையில் இந்த அகழ்வாய்வு உள்ளது. கீழடியில் மிக அர்ப்பணிப்போடு நடந்து வரும் இந்த அகழ்வாராய்ச்சி முயற்சிகளுக்கு தமிழக அரசு தனது முழு ஒத்துழைப்பை முழுமையாக அளித்து வருகிறது. அகழ்வாராய்ச்சியின் ஒவ்வொரு நகர்வுக்கும் அரசு கொடுத்து வரும் ஆதரவும் ஒத்துழைப்பும், அதில் எந்த சுணக்கமும் தொய்வும் ஏற்படாது, பணிகள் செவ்வனே தொடர வழிவகை செய்கிறது. எல்லா வகையிலும் நாங்கள் அதற்கான முயற்சி எடுத்து வருகிறோம். தமிழர் பண்பாட்டை பறைசாற்ற வேண்டும் என்று தீவிரமாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழர் நலன்களை காக்க எங்கள் அரசு  எப்போதும் தயங்கியதே இல்லை.

 இப்போது நான்காம் கட்ட அகழ்வாய்வு பணிகள் முடிந்துள்ளன. இதில் கண்டறிப்பட்ட தரவுகளைக் கொண்டு, நான்காம் கட்ட அகழ்வாய்வின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்ததாக ஐந்தாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக கொடுக்கப்பட்ட காலக்கெடு ஏற்கனவே முடிந்து விட்டது. எனினும் துல்லியமான ஆய்வுகள் மேற்கொள்ளும் வசதிக்காக மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி இன்னும் ஒரு வாரத்தில் ஐந்தாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்து விடும். அதன்பிறகு அது தொடர்பான ஆய்வறிக்கை மூன்று மாதங்களில் வெளியிடப்படும். கீழடியில் அகழவாய்வு பணிகள் தடையில்லாமல் மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் உள்ளது.

 இதுமட்டும் அல்லாமல் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசிடம் 15 கோடி நிதி கேட்டுள்ளோம். அருங்காட்சியகம் அமைப்பதற்காக தமிழக அரசு ஏற்கனவே 1 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதை வைத்து தமிழக அரசு டெண்டர் விட முடிவு செய்துள்ளது. பெரிய அளவில் அருங்காட்சியகம் அமைந்திட வேண்டும். அதற்கு வேண்டிய நிதி திரட்டும் முயற்சி நடக்கிறது.  நாங்கள் நேரடியாக மத்திய அமைச்சரை சந்தித்து நிதி கேட்டோம். மத்திய அரசு பரிசீலிப்பதாக கூறியிருக்கிறது. அருங்காட்சியகம் அமைப்பதற்கான நிதி தருவது தொடர்பாக இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அரசு தனது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். அகழ்வாய்வுப் பணிகள் நடைபெற்று வரும்  கீழடியை பார்வையிட தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். நாளுக்கு நாள் அகழாய்வு நடைபெறும் பகுதிகளுக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அங்கு வந்து என்ன நடக்கிறது என்பதை பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால் கீழடியில் ஆய்வு பணியை முடிப்பதில் சற்று காலதாமதம் ஏற்படுகிறது.

 கீழடியில் உலகத்தரமான அருங்காட்சியகம் அமைப்பதில் எந்த தடைகளும் இல்லை. நிச்சயம் அந்த இடத்தில் அருங்காட்சியகம் வைப்பதற்கான நிதியை மத்திய அரசு தரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கிடையில், கீழடி அகழ்வாய்வின் வழியில் கிடைத்த தரவுகளை தமிழர் பண்பாடு என சொல்வதை விட பாரத பண்பாடு என சொல்ல வேண்டும் என நான் கூறியதாக சொல்கிறார்கள். உண்மையில் நான் அப்படி எதுவும் சொல்லவில்லை. அது தவறான தகவல்.கீழடியில் உலகத்தரமான அருங்காட்சியகம் அமைப்பதில் எந்த தடைகளும் இல்லை. நிச்சயம் அந்த இடத்தில் அருங்காட்சியகம் வைப்பதற்கான நிதியை மத்திய அரசு தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

Tags : Government ,Minister , To protect, Tamils, hesitated, MP Pandiyarajan, Minister , Tamil Development
× RELATED விவசாயிகளின் நலனை காக்க ஒன்றிய அரசு...