×

கோயில் சொத்துக்களை பாதுகாக்க புதிதாக 150 செயல்அலுவலர் பணியிடம்: அறநிலையத்துறை முடிவு

சென்னை: கோயில் சொத்துக்களை பாதுகாக்க 150 செயல் அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இந்த கோயில் வருமானம் மற்றும் அசையும், அசையா சொத்துக்களை கவனிக்கும் வகையில் இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர்கள் என 628 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், 582 செயல் அலுவலர் பணியிடங்கள் உள்ளது. அவற்றில் 240 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், செயல் அலுவலர் ஒவ்வொரு வரும் தலா 2 முதல் 4 கோயில்கள் வரை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். இதனால், அனைத்து பொறுப்பு கோயில்களிலும் நிர்வாக பணிகளையே அந்த செயல் அலுவலர்களால் முறையாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் வருமானம் இல்லாத அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ள பெரும்பாலான கோயில்களில் செயல் அலுவலர்கள் நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மண்டல இணை ஆணையரிடம் இருந்து கோயிலுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரம், அதில் இருந்து பெறப்படும் வருவாய்  உள்ளிட்ட விவரங்களை அனுப்பி வைக்க கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி, செயல் அலுவலர் பணியிடங்களை நியமிக்க தகுதி வாய்ந்த கோயில்களை தேர்வு செய்து அந்த பட்டியலை கமிஷனருக்கு அனுப்பி வைத்தனர். அதன்படி புதிதாக 150 செயல் அலுவலர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. ஏற்கனவே செயல் அலுவலர் காலிபணியிடங்கள் உள்ள நிலையில் தற்போது புதிய பணியிடங்கள் தோற்றுவிப்பதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என்று செயல் அலுவலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணியிடங்களை உயர்த்த கோரிக்கை
இந்து சமய அறநிலையத்துறையில் முதல் நிலை செயல் அலுவலர் 66 பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களை 100 ஆக உயர்த்தவும், இரண்டாம் செயல் அலுவலர் பணியிடங்களை 112ல் இருந்து 175 ஆகவும், உதவி ஆணையர் பணியிடங்களை 36ல் இருந்து 54 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று செயல் அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Department of Charity ,executive workplace , temple ,executive, workplace, Charity
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...