×

குழந்தைகள் பலர் உயிரிழந்துள்ளனர் டெங்குவால் பாதிக்கப்பட்டவர் விபரத்தை கூட தருவதில்லை: அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: குழந்தைகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்றும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் விபரத்தை கூட தருவதில்லை என்றும் அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு பொது  மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பிறகு, மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னை அரசு பொது மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரையில் ஆயிரக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதில் குழந்தைகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கொடுமையும் நடந்திருக்கிறது.

இந்த சென்னை அரசு பொது மருத்துவமனையில் மட்டும், டெங்குவால் பாதிக்கப்பட்ட  31 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் ஆண்கள் 17 பேரும், பெண்கள் 14 பேரும் ஆவர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எத்தனை பேர் என்கிற விபரத்தைக் கூட இந்த அரசு வெளிப்படையாகத் தராமல், மிகச் சர்வ சாதாரணமாக, “மர்மக் காய்ச்சல் வந்திருக்கிறது” என்று ஒரு தவறான பிரசாரத்தைச் செய்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளித்திட வேண்டும். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர், அண்மையில் இந்த நோயைப் பற்றிக் கேட்கிறபோது, பெரிய நகைச்சுவை ஒன்றைக் கூறியிருக்கிறார். ‘கொ.மு.-கொ.பி.’- அதாவது, “கொசுவுக்கு முன்னால், கொசுவுக்குப் பின்னால்” என்று ஒரு நகைச்சுவையைச் சொல்லியிருப்பது, இக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் இப்படி ஒரு பிதற்றலான பேட்டியை அமைச்சர் தருவது என்பது, மிகவும் வருத்தத்திற்குரிய, கண்டனத்திற்குரிய ஒன்று. ஆகவே, டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சையை இந்த அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அதுமட்டுமல்ல, அந்தக் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள், டெங்கு வராமல் தடுக்கும் நடவடிக்கைகளை விழிப்புணர்வுடன் இருந்து நிறைவேற்றிட வேண்டும் எனும் என்னுடைய வேண்டுகோளையும் நான் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:போர்க்கால அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கும்போது அமைச்சர்கள் நாங்குநேரி, விக்கிரவாண்டி போன்ற இடைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுகாதாரத் துறை மட்டுமாவது இதில் கவனம் செலுத்தியிருக்கலாம் இல்லையா?இது அமைச்சர் ‘குட்கா புகழ்’ விஜயபாஸ்கரிடம் கேட்கவேண்டிய கேள்வி. அவர் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாக எனக்குத் தெரியவில்லை. மக்களைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ கவலைப்படாத ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே தான், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடியவர்களை நேரடியாகப் பார்த்து, இங்கு சிகிச்சை கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய மருத்துவர்களையும் சந்தித்து தீவிர சிகிச்சையை, உரிய சிகிச்சையை வேகப்படுத்த வேண்டுமென்ற  கோரிக்கையை நான் வைத்துவிட்டு வந்திருக்கிறேன்.

நீட் தேர்வு ஆள்மாறாட்டப் பிரச்னையில் அரசு எடுத்த நடவடிக்கை பற்றி உங்கள் கருத்து?சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளியில் வரும் என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.பேனர் வைப்பதற்கு முதலமைச்சருடைய படத்தையும், பிரதமர் மோடியினுடைய படத்தையும் கட்அவுட்டாக  வைப்பதற்கு நீதிமன்றத்திற்குச் சென்று, அனுமதி கேட்கக்கூடிய நிலையில், ஏன், நீட் தேர்வுப் பிரச்னையில் இந்த அரசு  நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வி.பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 49 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்களே?அந்த வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று நான் பிரதமருக்கு ஏற்கனவே என்னுடைய வேண்டுகோளை எடுத்து வைத்திருக்கிறேன்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

பெரியார் பல்கலை தொழிலாளர்சங்கத்தினர் சந்திப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில்  சேலம், பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத் தலைவர் என்.அரசு, பொதுச்செயலாளர் சி.சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.அப்ேபாது பல ஆண்டுகளாக பல்கலைக் கழகத்தில் தினக்கூலிகளாக பணியாற்றி வருபவர்களின்  பணியினை நிரந்திரமாக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 8ம் தேதி அனைத்துக் கட்சிகள் பிரதிநிதிகள் பங்கு பெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்திட வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை அளித்தனர்.

Tags : Many ,children ,government ,AIADMK ,MK Stalin , children, Dengue, MK Stalin, AIADMK government
× RELATED தண்ணீர் தேடி அலைந்தபோது குழியில்...