×

சீனா அதிபர் மாமல்லபுரம் வருகை எதிரொலி சென்னையில் போலீஸ் அதிகாரிகள் தீவிர ஆலோசனை: கிண்டி நட்சத்திர ஓட்டலில் அதிரடி சோதனை

சென்னை: சீனா அதிபர் மாமல்லபுரம் வருவதையொட்டி காஞ்சிபுரம் மற்றும் சென்னை போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும், அதிபர் தங்கும் கிண்டி நட்சத்திர ஓட்டலில் அதிநவீன கருவிகளுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.சீனா அதிபர் வரும் 10ம் தேதி மாமல்லபுரம் வருவதையொட்டி கடந்த ஒரு மாதமாக காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதலில் கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.இதற்கிடையே சீனா அதிபர் வருகையில் திடீரென சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 10ம் தேதிக்கு பதில் 11ம் தேதி பிற்பகல் தான் சீனா அதிபர் சென்னை விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் முழு அரசு மரியாதையுடன் சீனா அதிபரை இந்திய கலாசார நடன நிகழ்ச்சிகளுடன் வரவேற்கின்றனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த உடன் சீனாவில் இருந்த கொண்டு வரப்படும் குண்டு துளைக்காத சொகுசு காரில் சீனா அதிபர், கிண்டியில் உள்ள 7 நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.

இதற்காக சீனாவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீனா அதிபர் தங்கும் ஓட்டல் மற்றும் மாமல்லபுரத்தில் நிகழ்ச்சிகள் நடக்கும் பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். நாளை மறுநாள் சீனாவில் இருந்து அதிபர் பயன்படுத்தும் குண்டு துளைக்காத கார் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் விமானம் மூலம் ெசன்னை வருகிறது.சீனா அதிபருடன் அந்நாட்டின் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் என 150க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழக டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையை தொடர்ந்து நேற்று காலை 11.30 மணிக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் தலைமையில் சீனா அதிபருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

சீனா அதிபருக்கு அளிக்கும் பாதுகாப்பில் எந்த வித குறைபாடும் இருக்க கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை, பழைய குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகளை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், தடை ெசய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த நபர்களையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

சீனா அதிபர் தங்கும் கிண்டி ஓட்டலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீனா அதிபர் சென்னை வரும் போது முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் செல்லும் பாதைகளில் சிறப்பு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு சிறப்பு கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை போலீசார் 24 மணிநேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : President ,Chinese ,visit ,Mamallapuram ,Mamallapuram Police ,Government ,Kindi Star Hotel , Chinese President, Mamallapuram,authorities, hotel
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்