×

ஆயுதபூஜை, விஜயதசமி கவர்னர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு கவர்னர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.கவர்னர் பன்வாரிலால் புரோகித்: தீய சக்திகளை எதிர்த்து நன்மை சக்திகள் பெற்ற வெற்றியைக் குறிக்கும் வகையில் ஆயுத பூஜை பண்டிகை தமிழகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தின் பத்தாவது நாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளில் தமிழக மக்கள் மதநல்லிணக்கம், பன்முகத்தன்மையை வளர்க்கவும், அவர்களின் வாழ்க்கை தரம் உயரவும் என்னுடைய வாழ்த்துக்கள்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி: வெற்றி திருநாளாம் விஜயதசமி திருநாளன்று தொடங்கப்படும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், மக்கள் இறைவனை வணங்கி, கல்வி, கலை, தொழில் போன்றவற்றை தொடங்கி விஜயதசமி திருநாளை கொண்டாடுவார்கள்.

இத்தகைய சிறப்பு மிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்: செய்யும் தொழிலே தெய்வமென்று போற்றும் அத்தனை பேரும் அவர்கள் செய்யும் பணியிலும், தொழிலும் இந்த விஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும். அனைவருக்கும் இந்த ஆயுதபூஜை பல வெற்றிகளை குவிக்கும் வெற்றி திருநாளாக விளங்க வேண்டுமென நம் இந்திய மக்கள் அனைவருக்கும் என் சரஸ்வதிபூஜை, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளில், அன்னையின் அருளால் மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி பெற்று, எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட, எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: மனித சமுதாயத்திற்கு அடிப்படை தேவைகளாக இருக்கின்ற வீரம், கல்வி, செல்வம் ஆகிய மூன்றையும் அள்ளி வழங்குகின்ற மாபெரும் சக்திகளான துர்கா, சரஸ்வதி, லஷ்மி ஆகியோருக்கு நமது நன்றியையும், வணக்கத்தையும், வேண்டுதலையும் தெரிவிக்கும் விழாவாக 9 தினங்கள் நவராத்திரி நாட்களாக கொண்டாடப்பட்டு வருகின்றது.  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்:  தீய சக்திகளைப் புறந்தள்ளி, நேர்மறை சிந்தனைகளோடும், உறுதி சிறிதும் குறையாத நெஞ்சோடும் உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம் எனும் நன்னம்பிக்கையோடு, தமிழக மக்கள் அனைவரும் நலமும் வளமும் பெற்றிட ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியில் வாழ்த்துகிறேன்.இதே போல பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா, மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வீ.சேகர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : Leaders ,Arupooja ,Governor ,Chief Minister , Armored, Vijayadasamy,Governor ,Chief Minister
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...