×

பிரியாணி வித்தா குத்தமாய்யா?

* சட்டம் ஒழுங்கு பிரச்னை வருதாம் 3 பேரை அள்ளியது போலீஸ்

சென்னை: புளியந்தோப்பு பகுதியில் அதிகாலை 3 மணிக்கு பிரியாணி விற்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக கூறி 3 வியாபாரிகளை போலீசார் எச்சரித்து விடுவித்தனர். மேலும் 400 கிலோ பிரியாணியை பறிமுதல் செய்தனர்.சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் சாலை மற்றும் டிகாஸ்டர் சாலையில் அதிகாலை 3 மணி முதல் பிரியாணி விற்கப்பட்டு வருகிறது. இது சென்னை முழுவதும் மிக பிரபலம். ஐ.டி ஊழியர்கள் முதல் இரவு நேர பணியாளர்கள் பலரும் பணி முடித்து காலை இங்கு வந்து பிரியாணி சாப்பிடுவது வழக்கம். தினமும் காலை 3 மணிக்கு 200 முதல் 300 பேர் வரை இங்குள்ள பிரியாணி கடைகளில் பிரியாணி சாப்பிட வருவார்கள். இந்நிலையில் சமீப காலமாக சமூக விரோதிகள் மற்றும் கஞ்சா புகைப்பவர்கள் இங்கு வந்து தகராறு செய்கின்றனர்.

இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக புளியந்தோப்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று காலை அங்கு சென்ற போலீசார் 3 கடைகளில் இருந்து சுமார் 400 கிலோ சிக்கன் மற்றும் மட்டன், பீப் பிரியாணிகளை பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர்களான சம்சுதீன் (50), அப்துல் சாதீக் (28), முன்னாகான் (40) ஆகிய 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து  இனி காலை 6 மணி முதல் தான் பிரியாணி விற்பனை செய்யவேண்டும் என எச்சரித்து அனுப்பினர்.

Tags : Is Biryani ,Kutamayya?
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை