×

மது பழக்கம் உள்ளவருக்கு சகோதரியை திருமணம் செய்து வைக்க எதிர்ப்பு தெரிவித்த வாலிபர் கொலை: வடமாநில தொழிலாளி கைது

சென்னை: மது பழக்கம் உள்ளவருக்கு தன் அக்காவை திருமணம் செய்து வைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்குமார் (19). இவர், மாங்காடு அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் தங்கி, கட்டுமான வேலை செய்து வந்தார். இதே நிறுவனத்தில் அஜய் குமாரின் உறவினரான சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சுனில் கோண்டா (24) என்பவரும் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், அஜய்குமாரின் அக்காவை, உறவினரான சுனில் கோண்டாவிற்கு திருமணம் செய்து வைக்க, சொந்த ஊரான சட்டீஸ்கரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது அஜய்குமார், ‘‘சுனில் கோண்டாவிற்கு குடிப்பழக்கம் இருப்பதால், ஒரு குடிகாரனுக்கு தனது அக்காவை கட்டி வைக்கக் கூடாது,’’ என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், திருமணம் தடைபட்டது. இதனால், ஆத்திரமடைந்த சுனில் கோண்டா, அஜய்குமாரை பழி வாங்க நேரம் பார்த்து காத்திருந்தார். இந்த நிலையில், மீண்டும் சென்னை கொளப்பாக்கம் வந்து, இருவரும் தங்களது வேலைகளை பார்த்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலை முடிந்ததும், தங்களது அறைக்கு திரும்பிய இருவருக்கும் இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுனில் கோண்டா, நீ உயிரோடு இருக்கும் வரை எனக்கு திருமணம் நடக்காது. உன்னை கொன்றால் தான் நிம்மதி என்று கூறி, அங்கிருந்த கத்திரிகோலை எடுத்து அஜய்குமாரின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் அஜய்குமார் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அஜய்குமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அங்கு ரத்தக்கறை படிந்த ஆடையுடன் நின்றிருந்த  சுனில் கோண்டாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : sister , Youth arrested , allegedly, marrying, alcoholic sister
× RELATED ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சிஸ்டர்’