×

பஸ்சில் மழைநீர் ஒழுகியதால் பயணி தவிப்பு டிராவல்ஸ் நிறுவனத்துக்கு ரூ.23 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சொகுசு பஸ்சில் மழைநீர் ஒழுகியதால் அவதியடைந்த பயணிக்கு ₹23 ஆயிரம் இழப்பீடு வழங்க பிரபல டிராவல்ஸ் நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர்கள் சதீஷ், ஹனா வசந்தி சதீஷ். இவர்கள், கடந்த 2015ம் ஆண்டு தங்களது குழந்தை சரஹா உடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக, பிரபல டிராவல்ஸ் நிறுவனத்தின் படுக்கை வசதி கொண்ட ஏசி பஸ்சில் 3 பேருக்கு ₹3300 செலுத்தி, டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

அதன்படி கடந்த 16.5.2015 மாலை 5.30 மணிக்கு மேற்கண்ட நிறுவனத்தின் சொகுசு பஸ்சில் ஏறி சீட்டில் அமர்ந்துள்ளனர். பஸ்சில் ஏறிய போதிலிருந்தே மழை பெய்து வந்துள்ளது. இந்த நிலையில், சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, பேருந்து மேற்கூரையில் இருந்து உள்ளே மழைநீர் ஒழுகியது. இதனால், அவர்கள் கொண்டு சென்ற உடமைகள் ஈரமானது. மேலும், தூங்க முடியாமல் தவித்துள்ளனர். இதுகுறித்து டிரைவரிடம் கேட்டபோது, அவர் முறையாக பதிலளிக்காமல் அலட்சியப்படுத்தி உள்ளார். டிராவல்ஸ் ஊழியர்களிடம் கேட்டபோது, ‘‘பிடிக்கவில்லை என்றால், இறங்கி வேறு பேருந்தில் செல்லுங்கள்,’’ என்று அலட்சியமாக கூறியுள்ளனர்.

இதனால், தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய டிராவல்ஸ் நிறுவனத்திடம் இருந்து உரிய இழப்பீடு பெற்று தரக்கோரி, சதீஷ், ஹனா, சரஹா ஆகியோர் சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, நீதிபதி மோனி மற்றும் உறுப்பினர் பாஸ்கர் குமரவேல் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் டிராவல்ஸ் நிறுவனம் பயணிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியது ஆதாரங்களுடன் உறுதியாகியுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனம், மனுதாரர்களுக்கு டிக்கெட் கட்டணம் ₹3,300 மற்றும் மன உளைச்சலுக்கு ₹20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.

Tags : France , Consumer court ,orders, Fines , travel, தவி 23 thousand
× RELATED சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத...