×

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு விமானத்தில் இன்ப அதிர்ச்சி: வைரலாகும் வீடியோ

புதுடெல்லி: தனியார் நிறுவன விமானத்தில் பயணித்த இஸ்ரோ தலைவர் சிவனுக்கு, விமான  பணியாளர்களும், பயணிகளும் கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்த வீடியோ, சமூக  வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி  நிறுவனமான இஸ்ரோ, கடந்த ஜூலை 22ம் தேதி சந்திரயான்- 2 செயற்கைகோளை விண்ணில்  செலுத்தியது. அதில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், கடந்த செப்டம்பர் 7ம்  தேதி நிலவில் தரையிறங்கும் போது தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த தோல்வியால் கண் கலங்கிய இஸ்ரோவின் தலைவர் சிவனை, பிரதமர் மோடி அரவணைத்து ஆறுதல் கூறினார்.நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் திட்டம் தோல்வி அடைந்தாலும், சந்திரயான் -2ன் ஆர்ப்பிட்டர், தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இதனால், சிவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில்  தனியார் நிறுவன விமானத்தில் பயணிக்க சென்ற சிவனுக்கு விமான பணியாளர்களும்,  பயணிகளும் எழுந்து நின்று கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி உள்ளது.அந்த வீடியோவில், ‘இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன  தலைவரை வரவேற்கிறோம்’ என்று விமான ஒலிபெருக்கியில் வரவேற்பு  அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விமானப் பணியாளர்கள் அவருடன் குரூப்  செல்பி எடுத்துக் கொள்கின்றனர். இதையடுத்து,  இருக்கைகளுக்கு  மத்தியில் உள்ள பாதையில் பயணிகளின் கைதட்டல்களுக்கு இடையே, புன்முறுவலுடன் கை அசைத்தபடி அவர் செல்கிறார்.


Tags : Shivan ,ISRO ,flight , ISRO ,chief Shivan, gets, flight
× RELATED சென்னையில் இருந்து மொரிஷியஸ்...