×

விஜய் ஹசாரே டிராபி தமிழகம் 6வது வெற்றி

ஜெய்பூர்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சி பிரிவில் திரிபுராவுடன் நேற்று மோதிய தமிழக அணி தொடர்ச்சியாக 6வது வெற்றியை பதிவு செய்தது. ஜெய்பூர், கே.எல்.சைனி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த தமிழகம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 315 ரன் குவித்தது. அபினவ் முகுந்த் 84 ரன் (87 பந்து, 11 பவுண்டரி), பாபா அபராஜித் 87 ரன் (97 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் 40 ரன் (23 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். முரளி விஜய் 18, வாஷிங்டன் சுந்தர் 36, முருகன் அஷ்வின் 25* ரன் எடுத்தனர்.

அடுத்து 50 ஓவரில் 316 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய திரிபுரா அணி, 34.3 ஓவரிலேயே 128 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பிரத்யுஷ் சிங், மிலிந்த் குமார் தலா 24, போஸ், சென் சவுத்ரி தலா 20 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர்.தமிழக பந்துவீச்சில் நடராஜன் 3, எம்.அஷ்வின், சாய் கிஷோர் தலா 2, விஜய் ஷங்கர், விக்னேஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தமிழக அணி 4 புள்ளிகளை தட்டிச் சென்றது. 187 ரன் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 6வது வெற்றியை பதிவு செய்த தமிழகம், சி பிரிவில் 24 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.குஜராத் 5 போட்டியில் 20 புள்ளி பெற்று 2வது இடத்திலும், சர்வீசஸ் (16), பெங்கால் (12), திரிபுரா (12) அணிகள் அடுத்த இடங்களிலும் உள்ளன.


Tags : Vijay,Hazare, Trophy
× RELATED பைனலில் கே.எல்.ராகுல் - மயாங்க்...