×

ஷமி, ஜடேஜா விக்கெட் வேட்டை 203 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: 1-0 என முன்னிலை பெற்றது

விசாகப்பட்டினம்: தென் ஆப்ரிக்க அணியுடன் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 203 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முன்னிலை பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி, முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. விசாகப்பட்டினம் ஒய்.எஸ்.ஆர் ஸ்டேடியத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.தொடக்க வீரர்கள் மயாங்க் அகர்வால் 215 ரன், ரோகித் ஷர்மா 176 ரன் விளாசி அசத்தினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, முதல் இன்னிங்சில் 431 ரன் குவித்து ஆல் அவுட்டானது. டீன் எல்கர் 160 ரன், டி காக் 111 ரன், கேப்டன் டு பிளெஸ்ஸி 55, முத்துசாமி 33* ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் அஷ்வின் 7 விக்கெட் கைப்பற்றினார். ஜடேஜா 2, இஷாந்த் 1 விக்கெட் வீழ்த்தினர்.71 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ரோகித் ஷர்மா மீண்டும் சதம் விளாசி சாதனை படைத்தார். அவர் 127 ரன் விளாச, புஜாரா 81, ஜடேஜா 40 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் கோஹ்லி 31, ரகானே 27 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இதைத் தொடர்ந்து, 395 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன் எடுத்திருந்தது. மார்க்ராம் 3, டி புருயின் 5 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். டி புருயின் 10 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் கிளீன் போல்டானார்.

அடுத்து வந்த தெம்பா பவுமா 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஷமி வேகத்தில் ஸ்டம்புகள் சிதற டக் அவுட்டாகி வெளியேறினார். கேப்டன் டு பிளெஸ்ஸி (13 ரன்), டி காக் (0) இருவரும் ஷமி வேகத்தில் அடுத்தடுத்து கிளீன் போல்டாகி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினர். தென் ஆப்ரிக்க அணி 23.1 ஓவரில் 60 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.ஜடேஜா வீசிய 27வது ஓவர் தென் ஆப்ரிக்க அணிக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. அந்த ஓவரின் முதல் பந்தில், பொறுப்புடன் விளையாடிக் கொண்டிருந்த தொடக்க வீரர் மார்க்ராம் (39 ரன், 74 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) ஜடேஜாவிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வெர்னான் பிலேண்டர் 4வது பந்திலும், கேசவ் மகராஜ் 5வது பந்திலும் டக் அவுட்டாகி அணிவகுக்க, தென் ஆப்ரிக்கா 70 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.100 ரன்னை கூட தாண்ட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செனூரன் முத்துசாமி - டேன் பியட் ஜோடி 9வது விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடி இந்திய வீரர்களின் பொறுமையை வெகுவாக சோதித்தது. அரை சதம் அடித்த பியட் 56 ரன் எடுத்து (107 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) ஷமி வேகத்தில் கிளீன் போல்டானார். முத்துசாமி - பியட் இணைந்து 91 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.காகிசோ ரபாடா 18 ரன் எடுத்து (19 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஷமி வேகத்தில் விக்கெட் கீப்பர் சாஹா வசம் பிடிபட, தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சில் 191 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (63.5 ஓவர்). முத்துசாமி 49 ரன்னுடன் (108 பந்து, 5 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் முகமது ஷமி 5 விக்கெட், ஜடேஜா 4, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர்.இந்தியா 203 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. தொடக்க வீரராகக் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்சிலும் சதம் விளாசி சரித்திர சாதனை படைத்த ரோகித் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 40 புள்ளிகளையும் இந்தியா தட்டிச் சென்றது. 2வது டெஸ்ட் புனே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் வரும் 10ம் தேதி தொடங்குகிறது.


Tags : Jadeja ,Shami ,win ,India , Shami, Jadeja ,2 wickets, 203
× RELATED 28 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை...