இலங்கை அதிபர் தேர்தலில் பின் வாங்கினார் சிறிசேனா: கோத்தபய ராஜபக்சேக்கு ஆதரவு?

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா போட்டியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதையொட்டி புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 16ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் அதற்கான டெபாசிட் தொகையை நேற்று பகல் 12 மணிக்குள் செலுத்த வேண்டுமென அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில், தற்போதைய அதிபரான சிறிசேனா டெபாசிட் தொகையை செலுத்தவில்லை. இதன் மூலம், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது. 1982ம் ஆண்டுக்குப் பிறகு அதிபர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மூவருமே அடுத்த தேர்தலில் போட்டியிடாதது

இதுவே முதல் முறை. சிறிசேனாவைப் போல, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முக்கிய எதிர்க்கட்சி தலைவர் மகிந்தா ராஜபக்சே ஆகியோரும் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடவில்லை. இதற்கிடையே, சிறிசேனா-ராஜபக்சே இடையேயான முக்கிய சந்திப்பு நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், ராஜபக்சேவின் மக்கள் கட்சி வேட்பாளரும் அவரது சகோதரருமான கோத்தபய ராஜபக்சேக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக சிறிசேனா உறுதி அளித்துள்ளார். கோத்தபய ராஜபக்சே தவிர, முன்னாள் ராணுவ தளபதி மகேஷ் சென்னாயகே, வடக்கு மாகாண தமிழ் தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் சிவாஜிலிங்கம் ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் பேர் போட்டி

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட மொத்தம் 41 பேர் டெபாசிட் தொகையை செலுத்தி உள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்று. இலங்கை தேர்தல் வரலாற்றில் அதிபர் பதவிக்கு அதிகம் பேர் போட்டியிடுவது இம்முறையே என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் 12ம் தேதி வரை பிரசாரம் நீடிக்கும்.

Related Stories:

>