×

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தன் இடம்பெற்றுள்ள விமானப் படைக்கு துணிச்சல் விருது அறிவிப்பு

டெல்லி: விங் கமாண்டர் அபிநந்தன் இடம்பெற்றுள்ள விமானப் படைப்பிரிவுக்கு துணிச்சலுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத  தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது இந்திய விமானப்படை கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தாக்குதல் நடத்தி அழித்தது. இதற்கு  பதிலடியாக மறுநாள் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள், இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த முயன்றன. அப்போது அவர்களை மிக் 21 ரக போர் விமானத்தில் விரட்டி சென்ற சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை  கமாண்டர் அபிநந்தன் வர்தமான், பாகிஸ்தானின் எப் 16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.

அப்போது, அவரது மிக் 21 விமானத்தை பாகிஸ்தான் ஏவுகணை தாக்கியது. இதில் சுதாரித்த அபிநந்தன் முன்கூட்டியே விமானத்தில் இருந்து  பாகிஸ்தான் பகுதியில் குதித்து உயிர் தப்பினார். அவரை சிறை பிடித்த பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக கடந்த மார்ச் 1ம் தேதி விடுவித்தது. இந்நிலையில் கடந்த பிப்., 27-ம் தேதி வான்வெளியில் பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து, அந்நாட்டின் எப்.,16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தன், இடம்பெற்றிருந்த 51வது படைப்பிரிவுக்கு இந்திய விமானப்படையின் யூனிட் சைட்டேசன் எனப்படும் விருது வழங்கப்படும் என விமானப்படை தளபதி, ஆர்கேஎஸ் பதுரியா அறிவித்தார்.

இந்த விருதை குழுவின் கேப்டன் சதீஷ் பவார் பெற்று கொள்வார். மேலும் இதே விருது, பாலகோட்டில் தாக்குதல் நடத்திய மிராஜ் 2000 போர்விமானங்கள் இடம்பெற்றிருந்த 9வது படைப்பிரிவு மற்றும் சிக்னல் பிரிவு தலைவர் மிண்டி அகர்வாலுக்கும் வழங்கப்படுகிறது. வரும் 8 ம் தேதி நடக்கும் இந்திய விமானப்படையின் 87 வது ஆண்டு விழாவின் போது இந்த விருதுகளை விமானப்படை தளபதி பதூரியா வழங்கஉள்ளார்.


Tags : Abhinandan Aviation Forces , Pakistani fighter aircraft, Abhinandan, bravery award
× RELATED பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது 94.56...