×

மாயமான இன்ஜி. மாணவி காதலனுடன் திடீர் தஞ்சம்: மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பரபரப்பு

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியை சேர்ந்தவர் திலகா (19). நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். திலகாவுடன் சேர்த்து அவரது பெற்றோருக்கு 3 மகள்கள். அவர்களில் மூத்த சசோதரிகள் இருவருக்கும் திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் திலகாவுக்கு காரவிளையை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்திருந்தனர். வரும் நவம்பர் 11ம் திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் தீவிரமாக இறங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாளுக்கு முன்பு திலகா திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்தவித பலனும் இல்லை.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் திலகாவின் செல்போன் டவரை வைத்து பார்த்தனர். அப்போது வள்ளியூர் மாவடி பகுதியில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த தீவிர விசாரணையில் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மாணவர் சார்லஸ் (21) உடன் தங்கி இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் திலகா நேற்று சார்லசுடன் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும், வீட்டில் பார்த்த வரன் பிடிக்கவில்லை எனவும், தன்னை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்ள கூறியதால் வீட்டைவிட்டு வெளியேறி சேரன்மாதேவியில் ஒரு கோயிலில் சார்லசுடன் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். இந்த தகவல் அறிந்ததும் திலகாவின் தாயார் மற்றும் உறவினர்கள் மார்த்தாண்டம் காவல் நிலையம் வந்தனர். அவர்கள் திலகாவை தங்களுடன் வருமாறு அழைத்தனர்.

ஆனால் காதல் கணவருடன் செல்வதில் அவர் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் திலகாவுக்கு வரன் பார்த்த வாலிபரின் வீட்டாரும் அங்கு வந்தனர். அவர்கள் திருமண ஏற்பாடு செய்த வகையில் ரூ.1 லட்சம் வரை எங்களுக்கு செலவு ஆகியுள்ளது. எங்களை கேவலப்படுத்தி விட்டாய். எனவே அந்த பணத்தை தர வேண்டும் எனறு பிடிவாதம் பிடித்தனர். இதையடுத்து இரு தரப்பினரும் பேசி முடிக்குமாறு போலீசார் கூறினர். இதையடுத்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்குள் சமரசம் செய்து கொண்டனர். பின்னர் காதல் தம்பதியை ேபாலீசார் ஒன்றாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காவல் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Magical Inge ,Marthandam Police Station , Asylum, Marthandam, Police Station
× RELATED மார்த்தாண்டம், நேசமணிநகர்...