×

இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் தகராறு: சாலையில் சடலத்துடன் உறவினர்கள் மறியல்.. கம்பத்தில் பரபரப்பு

கம்பம்: கம்பத்தில் இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது பறந்த தீப்பொறி அருகில் உள்ள கடைக்குள் விழுந்தது. இதனால் கடைக்காரருக்கும், இறுதி ஊர்வலத்தில் சென்றவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை கண்டித்து இறந்தவரின் சடலத்தை சாலையின் நடுவில் வைத்து மறியலில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனை அருகே உள்ள பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்று காலமானார். நேற்று மாலையில் சாமாண்டிபுரம் சாலையில் உள்ள மைதானத்திற்கு, முதியவரின் உடலை ஊர்வலமாக உறவினர்கள் எடுத்து சென்றனர்.

கம்பம் மெயின் ரோட்டில் வந்த போது, ஊர்வலத்தில் வந்தவர்கள் பட்டாசுகளை வெடித்தனர். இதில் பட்டாசுகளில் இருந்து வெளியேறிய தீப்பொறி, அப்பகுதியில் உள்ள பழைய டூவீலர்கள் விற்பனை செய்யும் கடைக்குள் விழுந்தது. இதனை கடை உரிமையாளர் தட்டி கேட்டதால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஊர்வலத்தில் சென்றவர்கள் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து அந்த கடையின் மீது ஊர்வலத்தில் சென்றவர்கள் கற்களை வீசினர்.

பின்னர் இறந்தவரின் சடலத்ைத சாலை நடுவில் வைத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Dispute ,funeral ,road ,Relatives ,Funworks , Funeral, dispute, picket .. Pole
× RELATED ஒடிசாவில் போஸ்டர் தகராறில் பாஜ தொண்டர் குத்தி கொலை