×

தாயை பிரிந்த பெண் யானை குட்டி வனத்துறை பராமரிப்பில் ‘ஜாலி வாக்’

சத்தியமங்கலம்: வனப்பகுதியில் இருந்து தாயை பிரிந்து தவித்து வந்த பெண் யானை குட்டியை வனத்துறையினர் வன கால்நடை மையத்தில் பராமரித்து வருகின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாயை பிரிந்த பெண் குட்டி யானை அப்பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களில் புகுந்தது. தகவலறிந்த வனத்துறையினர் குட்டியானையை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி குட்டி யானை ஆசனூர் வனப்பகுதியில் உள்ள வனச்சாலையில் சோகமாக சுற்றித்திரிந்தது. அதைக்கண்ட வனத்துறையினர் குட்டியானையை பத்திரமாக மீட்டு பவானிசாகர் அருகே உள்ள காராச்சிக்கொரை வன கால்நடை மையத்திற்கு கொண்டு சென்றனர்.

குட்டியானையை பரிசோதித்த வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் 3 மாதம் ஆன பெண் குட்டியானை தாய் யானையை பிரிந்ததால் மற்ற யானைகள் இந்த குட்டியானையை சேர்க்காது, இதனால் தனிமையில் விடப்பட்ட குட்டி யானை தவித்து வருகிறது. என தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து குட்டியானையை பராமரித்து வளர்க்க வனத்துறையினர் முடிவெடுத்தனர். குட்டி யானைக்கு அம்மு என செல்லமாக பெயரிட்டு வளர்த்து வருகின்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், குட்டி யானைக்கு தினந்தோறும் 15 லிட்டர் லேக்டோஜென் பால் உணவாக வழங்கப்படுகிறது. இத்துடன் ஊட்டச்சத்து டானிக் வழங்கப்படுகிறது. பால் குடித்த குட்டியானை வன கால்நடை மையத்தில் ஜாலியாக நடைபயணம் மேற்கொள்கிறது.

இந்த குட்டியானையை சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுமின்றி வெளியூர்களிருந்துவந்து பார்த்து ரசிப்பதோடு குட்டியானையுடன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். பெண் குட்டியானை மருத்துவமனை வளாகத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் காட்சியை பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர். குட்டியானை பிறந்து 6 மாதம் ஆகும் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக உட்கொள்ளும் குணமுடையது எனவும் 6 மாதங்களுக்கு பிறகு தீவனம் உட்கொள்ளும் என வனத்துறையினர் தெரிவித்தனர். விரைவில் இந்த பெண் குட்டி யானையை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்று பராமரிக்கப்பட உள்ளது. இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

Tags : forest department , Female elephant cub, forest department
× RELATED சென்னையில் கொரோனா சிகிச்சை...