×

திருவண்ணாமலையில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட அவலம்: காலியாக உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்... 250 குடியிருப்புகளில் 35 குடும்பங்களே வசிக்கும் அவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை  மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச வாடகையில்  குடியிருப்பில் தங்குவதற்கு வசதியாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்  சார்பில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அடுக்கு மாடி கட்டிடங்கள்  கட்டப்பட்டுள்ளன. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த  வளாகத்தில் மொத்தம் 186 குடியிருப்புகள் உள்ளது. இதில் 30 குடியிருப்புகள்  மட்டும் கடந்த 1994ம் ஆண்டு கட்டப்பட்டவை. இந்த குடியிருப்புகளில்   வசிப்பவர்களின் குழந்தைகள் விளையாடுவதற்கு வசதியாக வளாகத்தினுள் குழந்தைகள்  பூங்காவும், குடிநீர் வசதிக்காக திறந்தவெளி கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன.  இத்தகைய அனைத்து வசதிகளும் கொண்டுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய  குடியிருப்புகள் போதிய பராமரிப்பு மேற்கொள்ளப்படாததால், கட்டிடங்கள்  சேதமடைந்தும், சிமென்ட் சீலிங் பெயர்ந்து விழுந்து பாழடைந்த கட்டிடங்களாக  மாறி வருகின்றன.

அரசு ஊழியர் தங்கும் வசதிக்காக அனைத்து வசதிகளுடன்  அரசாங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடங்கள் முறையான  பராமரிப்பின்றி போனதால் தற்போது இதில் தங்குவதற்கு அரசு ஊழியர்களிடையே  ஆர்வம் குறைந்துள்ளது. அதற்கு காரணம் இங்குள்ள அவலநிலையும், வாடகை உயர்வும்  காரணம் என்கின்றனர் குடியிருப்பவர்கள். தற்போது, இங்குள்ள  குடியிருப்புகளில் 46 குடியிருப்புகளில் மட்டுமே குடியிருந்து வருகின்றனர்.  மற்ற குடியிருப்புகள் காலியாகவே உள்ளன. இந்த வளாகத்தில் உள்பகுதியில் உள்ள  சில பழமையான கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு அபாய நிலையில் உள்ளன.  அதுமட்டுமின்றி சில வீடுகளின் சுவர்களின் வெளிப்பகுதியில் மரங்கள் வளர்ந்து  சுவர்கள் விரிசல் கண்டு ஆபத்தான நிலையில் காட்சி அளித்து வருகின்றன.

மழைக்  காலங்களில் கட்டிடங்களின் மேல் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர்  ஒழுகும் நிலை உள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் சொட்டுவதால் இரவு  நேரங்களில் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம் என்கின்றனர் அங்குள்ள  பெண்கள். எந்த நேரமும் ஆட்கள் நடமாட்டமும், போக்குவரத்து நிறைந்த  சாலையாக உள்ள கிரிவலப்பாதையில் உள்ள இந்த குடியிருப்பு வளாகத்தை சுற்றிலும்  சுற்றுச்சுவர் கூட அமைக்கப்படவில்லை என்பது கூடுதல் சோகம். சுற்றுச்சுவர்  இல்லாததால், இரவு நேரங்களில் இங்கு வசிப்பவர்களது இருசக்கர வாகனங்கள்  அவ்வபோது மர்ம ஆசாமிகள் திருடிச்செல்கின்றனர். அதுமட்டுமின்றி இரவு  நேரங்களில் வீடுகளிலும் மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டுகின்றனர். இதனால் இந்த  குடியிருப்பு பகுதியில் வசித்துவருபவர்களுக்கு போதிய பாதுகாப்பும் இல்லாமல்  இரவு நேரங்களில் பெரும் அச்சத்தில் வசிக்கும் நிலை உள்ளது.

அரசு சார்பில், அரசு ஊழியர்கள்  குறைந்த வாடகை தொகையில் குடியிருப்பதற்கு வசதியாக பல லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள இந்த அடுக்கு மாடி குடியிருப்புகளை வீட்டு வசதி வாரியம்  முறையாக பராமரிக்காமல் போனதால், பெரும்பாலான குடியிருப்புகள்  குடியிருப்பதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த குடியிருப்பில்  தங்குவதற்கு புதியதாக எவரும் வருவது இல்லை. இங்கு வசிப்பவர்கள் தான்  குடியிருப்புகளை காலி செய்து வருகின்றனர். அரசு ஊழியர்கள் வசித்து வரும்  அரசுக்கு சொந்தமான கட்டிடங்களே முறையான பராமரிப்பு மேற்கொள்ளப்படாமல் உள்ள  நிலை அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள்  கட்டிடங்களை ஆய்வு மேற்கொண்டு, சேதமடைந்துள்ள கட்டிடங்களை சீரமைத்துத்  தரவும், அனைத்து குடியிருப்புகளிலும் மக்கள் குடியிருக்கும் சூழலை உருவாக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புவாசிகள் கூறியதாவது: இங்குள்ள திறந்தவெளி கிணற்றில் இருந்துதான் எங்களுக்கு குடிதண்ணீர் விநியோகம்  செய்யப்படுகிறது. இந்த கிணற்றினுள் தண்ணீர் சுகாதார சீர்கேடாக உள்ளது. இதனை  தூய்மைப்படுத்தாமல் அப்படியே விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீரை  விலை கொடுத்து வெளியில் வாங்கி வருகிறோம். இத்தகைய சுகாதாரமற்ற குடிநீர்  பெற மாதம் ரூ100 செலுத்துகிறோம். இந்த குடியிருப்பு வளாகத்தில் நிறைய  குறைகள் உள்ளன. இதனை எந்த அதிகாரியும் கண்டுகொள்வது கிடையாது. உரிய  நேரத்தில் வாடகை பணத்தை செலுத்தி வருகிறோம். ஆனால் அதிகாரிகள் எங்கள்  குறைகளை மட்டும் நிறைவேற்றுவதில்லை என்று வேதனை தெரிவித்தனர்.

1994ல் கட்டப்பட்ட வீடுகளும் சேதம்
தமிழ்நாடு  வீட்டுவசதி வாரியம் சார்பில், 30 குடியிருப்புகள் ரூ2 கோடியே 38 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த 1994ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர்  ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த கட்டிடம் கட்டப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது.  ஆனால், இந்த கட்டிடங்களும் சேதமடைந்து, மேல் மாடியில் உள்ள  குடியிருப்புகளில் மழை காலங்களில் தண்ணீர் ஒழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.  இங்குள்ள குடியிருப்புகள் நன்றாக இருக்கும் என குடிவந்த சிலர் மழை  காலங்களில் மழையில் நனையும் நிலை ஏற்பட்டுள்ளது, தரமற்ற முறையில்  கட்டப்பட்டதே இத்தகைய அவல நிலைக்கு காரணம் என்கின்றனர் குடியிருப்பவர்கள்.

நிர்வாக பொறியாளர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ‘அனைத்து அரசு குடியிருப்பு வளாகங்களில் சீரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அரசு குடியிருப்பு வளாகத்தில் சில கட்டிடங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. அவ்வாறு சேதமடைந்த கட்டிடங்களை இடிப்பதற்கு மற்றும் உள்ள கட்டிடங்கள் பழுது பார்ப்பதற்கு அறிக்கை தயாரிக்கப்பட்டு எங்களது தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு உத்தரவு கிடைத்தவுடன் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.

தனியார் வீடுகளை விட வாடகை அதிகம்
தனியார் வீடுகளில் வாடகை அதிகம் என்பதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வீட்டு வசதி வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வாடகைக்கு விட்டது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சம்பளத்தை உயர்த்தியது. இதனால் அவர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் வீட்டு வாடகையும் பலமடங்கு உயர்ந்தது. தற்போது அரசு குடியிருப்புகளை விட மிக அழகாக, அனைத்து வசதிகளுடன் கூடிய தனியார் வீடுகளின் வாடகைகள் குறைவாக உள்ளதாலும் சரியான பராமரிப்பு இல்லாததாலும் அரசு ஊழியர்கள் அரசு குடியிருப்புகளை காலி செய்து விட்டு தனியார் வீடுகளை நோக்கி செல்கின்றனர். எனவே, அரசு குடியிருப்புகளுக்கான வாடகையை அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : shelter ,Thiruvannamalai ,housing board houses ,apartments ,families , Housing Board Board House, Thiruvannamalai
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...