×

மனித நேயம் மறைக்கும் சமத்துவ பாகுபாடு: பணியிடங்களில் அதிகரிக்கும் பாலியல் தொல்லைகளால் பரிதவிக்கும் பெண்கள்... தமிழகத்தில் விசாகா கமிட்டி அமைக்க எதிர்பார்ப்பு

‘‘வீ ட்டுக்குள்ளே பெண்ணைப்  பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். இனி பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்,’’ என்று புயலாய்  சீறினார் முண்டாசு கவி பாரதி. இப்படி அவர் அனல் பரப்பிய காலத்தில், பெண்களுக்கு எதிரான  சாத்திரங்களும், சம்பிரதாயங்களும் சமூகத்தில் புரையோடிக் கிடந்தது. காலம் மாறியது. அந்த  கவிபிரம்மனின் கனவு பலித்தது. இன்று மண்ணின் மாபெரும் ஆளுமைகளாக மட்டுமல்ல,  விண்ணில் வட்டமடிக்கும் வீர மங்கைகளாகவும் வியக்க வைக்கின்றனர் பெண்கள். அதே நேரத்தில், சில வக்கிர மூளைகளில் பதிந்து விட்ட ‘பாலியல் பாகுபாடு’ என்ற கரும்புள்ளி, பெண்மையின் மேன்மையை சிதைக்கும் விஷமங்களுக்கு வித்தாகிறது. கண்ணியம் காத்து, பெண்ணியம் போற்றுவோம் என்ற பெரியார் மந்திரம் மட்டுமே இந்த புள்ளிகளை மாற்றி, புதிய விடியலுக்கு வழிகாட்டும் என்பது நிதர்சனம்.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு  எதற்கு? என்ற கேள்வி இன்று முற்றுப்புள்ளியாகி விட்டது.  அனைத்து பெண்களும் கல்வி கற்பதோடு,  பணிக்கு செல்வதையும் ஒரு கடமையாகவே கருதுகின்றனர். ஆனால் இப்படிப்பட்ட  காலகட்டத்தில் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்களும் பணியிடங்களில்  அதிகரித்து வருவது வேதனைக்குரியது. வளர்ந்த நாடுகளில் மட்டுமல்ல வளரும்   நாடுகளிலும், உலகில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் பெண்களுக்கு எதிரான   பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  சின்னஞ்சிறு குழந்தைகள்,   பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்கள் மட்டுமல்லாது   சித்தாள், விவசாய கூலிகள், நெசவு தொழிலாளிகளும் இந்த ெகாடுமைகளுக்கு ஆட்படுகின்றனர்.  நூறுநாள்  வேலைக்கு  செல்லும் பெண்கள் கூட பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர்  என்று சமீபத்தில் எழுந்த புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எத்தனையோ கஷ்டங்கள்,  குடும்ப சூழ்நிலைகளால் பணிக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான  பணியிடம் கிடைப்பது அவ்வளவு எளிதாக அமைவதில்ைல. பார்வையால்  பலாத்காரம் செய்யும் ஆண்கள்,  சிரித்துப் பேசினாலே பணிந்து போய்விடுவாள்  என்று நினைத்து தவறாக நடக்க முற்படும் உயரதிகாரிகள் பல இடங்களில் இருந்து  கொண்டேதான் இருக்கின்றனர். சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி,  மும்பை என நாட்டின் முன்னணி நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார்  நிறுவனங்களில் நீக்கமற, இத்தகைய பாலியல் தொல்லைகள் மறைமுகமாக  நடைபெறுவதாகவும் ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தில் வேலை கிடைக்கவும், அதனை நிரந்தரம் செய்துகொள்ளவும், சம்பள  உயர்வு போன்ற சலுகைகளுக்காகவும் பாலியல் ரீதியாக,   ஒத்துழைத்து செல்லும்படி தங்களது உயர் அதிகாரிகள் வற்புறுத்துவதாக, பல  பெண்கள் தெரிவித்துள்ளனர்.

உயரதிகாரிகளின் இச்சைக்கு இணங்காத  நிலையில், அதிக பணிச்சுமையை ஏற்படுத்துவது,  இரவில் தாமதமாக வீட்டிற்கு  செல்லும் சூழ்நிலையை உருவாக்குவது என உயர் அதிகாரிகளின் தொல்லை  நீளுவதாகவும் பெண்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் பல பெண்கள் தங்களுக்கு எதிராக  நடக்கும்  கொடுமைகளை எதிர்த்து புகார் கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள்.  பணிபுரியும்  இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து 70 சதவீத பெண்கள் புகார்  அளிப்பதில்லை என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளது. பெண்கள் தாங்கள் பணிபுரியும்  இடத்திலோ அல்லது படிக்கும் இடத்திலோ இது போன்ற சம்பவங்கள் நேர்ந்தால்,அதைத்  துணிச்சலுடன் வெளியே சொல்ல வேண்டும். இன்று விஞ்ஞான வளர்ச்சியால் பெண்ணுரிமை சட்டம் சார்ந்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது.

பணியாற்றும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பு, தடுப்பு, நிவாரணம் வழங்குவதற்கான சட்டம் 2012ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இதை சுருக்கமாக விசாகா என்றும் சொல்வதுண்டு. ஆனாலும் பெண்கள், தங்களுக்கு நேரும் கொடுமைகள் தொடர்பாக, பேச முன் வந்தால் மட்டுமே கொடுமைகளுக்கு தீர்வு கிடைக்கும். நீதியும் நிலைபெறும். சமீபத்தில் சென்னையில், பெண் போலீஸ் அதிகாரி ஒருவருக்கே, அவரது  உயர் அதிகாரி ஒருவர் செய்த பாலியல்  தொந்தரவு தமிழகம் முழுவதும் பெரும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த  அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க அரசு  தயங்கிய நிலையில், பெண் போலீஸ் அதிகாரி  நீதிமன்றத்தை நாடினார். உயர்  பதவியில் இருக்கும் அதிகாரியின்  புகார் மனுவுக்கே நடவடிக்கை எடுக்காத  அரசு, சாதாரண பெண்கள் கொடுக்கும்  புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமா?  என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இது போன்ற கேள்விகளும் புகார்களை முடக்கி விடுகிறது. அதே நேரத்தில் “பாலின சமத்துவம் என்பது ஓர் இலக்கு  மட்டுமல்ல. வறுமை ஒழிப்பு,  நீடித்த வளர்ச்சி,  நல்லாட்சி போன்ற பெரும்  சவால்களை சந்திக்கத் தேவையான ஒரு முன் நிபந்தனை,” என்று கூறியுள்ளார் ஐ.நா.வின் முன்னாள் பொதுச்செயலாளர் கோபிஅனன். இதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்மகனும் பாலியல் பாகுபாடுகளை தவிர்க்க வேண்டும். பெண்களை வீட்டின் கண்களாக மட்டுமல்லாமல், நாட்டின் கண்களாகவும் பாவித்து வழி நடத்த வேண்டும் என்பது பெண்ணியல் ஆர்வலர்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாகும்.

3 மாதத்தில் புகார் அளிக்க வேண்டும்
விசாகா தீர்ப்பின் படி, பணியிடங்களில்  பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த புகாரினை நிறுவன அளவிலான அல்லது இட அளவிலான புகார் குழுவிடம் சம்பவம் நடந்து 3 மாதங்களில் எழுத்துப்பூர்வமான புகாரினை அளித்திட வேண்டும். உடல் அல்லது உள்ள ரீதியான பாதிப்பின் காரணமாக இறப்பு அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணால்   எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க இயலவில்லை எனில் அவளது சட்டப்பூர்வமான வாரிசுதாரரோ அல்லது வேறு எவரேனுமோ புகாரினை பதிவு செய்திடலாம்.

சிறப்பு அம்சங்கள் நிறைய இருக்குது...
பொதுவாக  விசாரணை என்பது 90  நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். விசாரணை  நடத்தப்பட்டு முடிந்தவுடன்  10 நாட்களுக்குள் புகார் குழுவானது தனது  அறிக்கையை அளித்திட வேண்டும்.  இந்த  அறிக்கையின் அடிப்படையில் 60  நாட்களுக்குள் முதலாளி அல்லது நிறுவனர்  அல்லது மாவட்ட அதிகாரி நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும். மேலும்  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து புகார்  குழுவிற்கும் தெரிவிக்க  வேண்டும். பாதிப்பிற்கு உள்ளான பெண் விரும்பினால் புகார் குழுவானது விசாரணை மேற்கொள்வதற்கு முன்னதாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சியினை மேற்கொள்ளலாம் என்பதும் விசாகா சட்டத்தின் சிறப்பு  அம்சங்களாகும்.

58 வயது பெண்ணுக்கும் தொல்லை
58 வயதுடைய பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். மத்திய அரசு அலுவலகத்தில் தான் பணியாற்றி வருவதாகவும், எனக்கு அதிகாரிகளால் மறைமுகமாக பாலியல் தொல்லை வருவதாகவும் கூறியிருந்தார். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவு படி விசாகா கமிட்டியை அரசு அமைக்கவில்லை, இவ்வாறு கமிட்டி அமைக்கும் பட்சத்தில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கமுடியும் என கூறியிருந்தார். இது தொடர்பாக மத்திய அரசு, மாநகர போலீஸ் கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவ்வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள்...
யாராவது உதவி செய்தால் ஏன் அவர்கள் இதை செய்கிறார்கள்? எதற்கு செய்ய வேண்டும்? அவர் யார்? உதவி செய்வதில் இருந்து எப்படி அந்த உறவு தொடர்கிறது? தொலைபேசியில் அழைத்து பேசினால் நான் ஏன் அவரிடம் பேச வேண்டும் என்று உங்களை நீங்களே கேளுங்கள். நல்ல உறவுகளும், உண்மையில் உதவுபவர்களும் பெண்ணை தனியாக அழைப்பதில்லை.  யாரோ  ஒருவர் எப்போதாவது உதவி செய்தால் சரி.  அதே ஒருவர் பிரச்னை வரும் போது  எல்லாம் உதவி செய்தால், எதற்கு என்ற கேள்வி உங்கள் மனதில் வர வேண்டும். அது  அலுவலகமாக இருந்தாலும் சரி, அன்றாடம் நாம் வந்து செல்லும் இடமாக இருந்தாலும்  சரி. சில நிகழ்வுகள் குறித்து உங்கள் மனதில் கேள்வி எழுந்தால், அது தான்  உங்களுக்கு  நீங்களே போட்டு கொள்ளும் ஒரு பாதுகாப்பு வளையம். கேள்வியில் தொடங்கினால் உங்கள் பிரச்னைக்கு நீங்களே முற்றுப்புள்ளி  வைக்கலாம்.

தமிழகத்தில் ‘நோ’ விசாகா கமிட்டி
உச்சநீதிமன்ற  உத்தரவுபடி அரசு அலுவலகங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். ஆனால்  தமிழக அரசு இந்த கமிட்டியை இதுவரை அமைக்கவில்லை என்கின்றனர்  வருவாய்த்துறையினர். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் தமிழக அரசு  அதற்கான சுற்றறிக்கையை அனுப்பவில்லை. இதனால் தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும்  இந்த கமிட்டி அமைக்கப்படவில்லை. உடனடியாக இந்த கமிட்டியை அமைக்க வேண்டும் என  தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம் என்கின்றனர் வருவாய்த்துறையினர்.

மன உளைச்சலால் தற்கொலைகள் அதிகம்
பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் காரணமாக  தற்கொலை செய்து  கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அவர்களால் வெளியே சொல்ல முடியாமல், வெளியே சொன்னால் குடும்ப மானம்  போய்விடும் என்பதாலேயே அவர்கள் இந்த முடிவை எடுக்கின்றனர். அதே  நேரத்தில் பாலியல் தொடர்பாக எவ்வளவு புகார்கள்  வருகிறது என்ற தகவல்  யாரிடமும் இல்லை என்பதும் பெண்கள் அமைப்புகளின்  வேதனை.

விசாகா குழு பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது: வழக்கறிஞர் ஆதங்கம்
விடியல் பெண்கள் அமைப்பின் நிர்வாகியான வழக்கறிஞர் தமயந்தி கூறுகையில், ‘‘விசாகா சட்டத்தின்படி அமைக்கப்படும் குழுவே, இது போன்ற அவலங்களுக்கு தீர்வு தரும். ஆனால் தமிழக அரசு, இதற்குரிய உத்தரவு பிறப்பித்தும் அரசு, தனியார் நிறுவனங்களில் விசாகா குழு அமைக்கப்படவில்லை. ஒரு சில நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள விசாகா குழுவும் பெயரளவுக்கு மட்டுமே செயல்பட்டு வருகிறது. பிரச்னைகள் ஏற்படும் நேரத்தில் இந்த குழு, தலையிடுவதால் நிறுவனங்களின் பெயர் கெட்டுவிடும் என்று அதன் நிர்வாகிகள் கருதுவதும் முடக்கத்திற்கு ஒரு காரணம். எனவே அரசு, அனைத்து அலுவலகங்களிலும் இந்த குழுவை அமைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,’’ என்றார்.

பெண்ணை காப்பதில் ஆணின் தரம் உள்ளது: பெண்ணியல் ஆர்வலர் நம்பிக்கை
பெண்ணியல்  ஆர்வலர் பரிமளா கூறுகையில், ‘‘பெண்ணை  காப்பது,  ஒரு ஆணின் கடமை. அந்த காலத்தில் எந்த ஒரு பேரிடர், போர்  வந்தாலும் முதலில்  பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்றுவார்கள்.  பின்னர்தான் ஆண்,தன்னை  காப்பாற்றிக்கொள்வான். மனித குலத்தை  உருவாக்குவதும், அதை அழியாமல்  காப்பதும் பெண்ணின் கையில்தான் உள்ளது என்பதை  அனைவரும் உணர வேண்டும்.  ஒரு  பெண்ணை எப்படி நடத்துகிறார்? அவளுடன்  எவ்வாறு பழகுகிறார்? என்பதை வைத்தே  ஆணின் தரம் வரையறுக்கப்படுகிறது. தரமான ஆண்தான் பெண்ணை பாதுகாப்பான். எனவே நாட்டின் கண்களான பெண்களை  பாதுகாப்பது நம்  தார்மீக கடமை என்பதை ஆணினம் உணரவேண்டும்,’’ என்றார்.

விசாகா சட்டம் வந்தது எப்படி?
1990ம் ஆண்டு வாக்கில் பன்வாரிதேவி என்ற ராஜஸ்தான் அரசுப் பணியாளர் ஒருவர் அவருடைய  வேலையின் ஒரு பகுதியாக குழந்தைத் திருமணம் ஒன்றைத் தடுக்கச் சென்றார். அப்போது ஒரு சமூகத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதற்கு நியாயம் கேட்டு  ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்குப் பதிவு செய்திருந்தார். ஆனால்  அங்கு நீதி கிடைக்கவில்லை. குற்றம் செய்தவர்களும் விடுவிக்கப்பட்டார்கள். இதை எதிர்த்து விசாகா என்ற மகளிர் உரிமைகள் அமைப்பு  உச்ச  நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. 1997ல் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில்  வழங்கிய  தீர்ப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தத் தீர்ப்பு  பன்வாரி தேவிக்கு மட்டுமல்லாமல் வேலை பார்க்கும் இந்தியப் பெண்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் பங்கு வகித்தது என்பதை மறுக்க முடியாது.

20 ஆண்டுகளில் அபார வளர்ச்சி
சங்ககாலத்தில் மெத்த படித்த பெண்  புலவர்கள், எத்தனையோ பேர், இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிந்துள்ளோம். ஆனால் அதற்கு பிறகு வந்த கால கட்டங்களில்தான்,பெண்கள் அடிமையாகி வீட்டுக்குள் முடங்கி கிடந்துள்ளனர். கடந்த 60 ஆண்டுகளாகத்தான், பெண்கள் படிக்கவும் பணிபுரியவும்  ஆரம்பித்துள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த 20 வருடங்களில் பெண்களின் வளர்ச்சி அபாரமானது என்கின்றனர் வரலாற்று ஆர்வலர்கள்.

எங்கிருந்து தொடங்குது?  
பெண்கள் நன்றாக படித்து அனைத்து   அலுவலகங்களிலும், ஆணுக்கு சமமாகவும், சொல்லபோனால் ஆண்களை விடவும் பொறுப்பாகவும், சிறப்பாகவும் வேலை செய்கிறார்கள். இருந்தும் வேலை செய்யும் இடங்களில் பாலியல் பாகுபாடுகள் தொடர்கிறது. ஆணும் பெண்ணும்  சரி சமம் என்று, நாம் சொல்லிக்கொண்டாலும் எந்த வீட்டிலும் ஆண் குழந்தைக்கு இணையாக பெண் குழந்தைகளை வளர்ப்பதில்லை. பெண் குழந்தைகளுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகள் இருக்கிறது. வீட்டு  வேலைகள் செய்ய பெண் குழந்தைகளை பழக்கும் பெற்றோர், ஆண் குழந்தைகளை அதற்கு அனுமதிப்பதில்லை. இங்கிருந்து தான், ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான பாலின சமத்துவ புறக்கணிப்புகள் ெதாடங்குகிறது என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.


Tags : Humanitarian Equality Discrimination: Increasing Sexual Harassment ,Workplace Humanitarian Equality Discrimination: Increasing Sexual Harassment ,Workplace , Equal Discrimination, Sexual Harassment, and Transgender Women
× RELATED 7 செயற்பொறியாளர்கள் திடீர் பணியிட மாற்றம்