×

டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை சந்தித்து ஆறுதல்: பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சல் இறப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் வைரஸ் காய்ச்சல், மர்ம காய்ச்சல் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஏராளமானோர் காய்ச்சல் காரணமாக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக பரிந்துரைத்து அனுப்பப்படுகின்றனர். இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் 500 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதை தவிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு, மர்ம காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டிய சுகாதாரத்துறை தற்போது வரை விழித்துக் கொள்ளவில்லை.

இதனால், காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் பேட்டியளித்த அவர்; டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து நேரடியாக சந்தித்தேன்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையை பொறுத்தவரையில் மட்டும் ஆண்கள் 17 பேரும், பெண்கள் 14 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்; டெங்கு காய்ச்சல் பாதிப்பை தமிழக அரசு மர்ம காய்ச்சல் என தவறாக பிரசாரம் செய்து வருகிறது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் குதர்க்கமாக பேசியது கண்டிக்கத்தக்கது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தகவலை அரசு முழுமையாக வெளியிடவில்லை என கூறினார். காய்ச்சல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்களும் மேற்கொள்ள வேண்டும். பேனர் விவகாரத்திற்கு நீதிமன்றம் சென்ற தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் ஏன் செல்லவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Meeting ,victims ,Stalin , Dengue, Stalin
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...