×

பலஆண்டுகளாக வறண்டு கிடக்கும் கரியகோயில், ஆணைமடுவு அணைகளுக்கு காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றப்படுமா?... எதிர்பார்த்து காத்திருக்கும் கிழக்கு பாசன விவசாயிகள்

வாழப்பாடி: சேலம் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் கரியகோயில், ஆணை மடுவு அணைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், காவிரி உபரிநீர் பயன்பாட்டுத்திட்டம் நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு கிழக்கு பாசன விவசாயிகளிடம் எழுந்துள்ளது. தமிழகத்தில் 13 டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்கான நீராதாரமாக மேட்டூர் அணை விளங்குகிறது. ஆனால், இந்த அணையால் சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை.  நீர்நிலைகளை நம்பியே இங்கு விவசாயம் நடக்கிறது. தற்ேபாது ஆக்கிரமிப்புகள் மற்றும் வறட்சியால், பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. அதே நேரத்தில் ஆண்டு தோறும் மழைக்காலத்தில் மேட்டூர் அணை நிரம்பும் போது, லட்சக்கணக்கான லிட்டர் நீர், வீணாக கடலில் கலக்கிறது.

இந்த நீரை சேலத்திலுள்ள திருமணிமுத்தாறு, சரபங்கா, வசிஷ்ட நதிகளுக்கு திருப்பி விடுவதற்கான உபரிநீர் பயன்பாட்டு திட்டத்தை ெசயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்ேபாது மேட்டூர் உபரிநீரை, கரூர் மாவட்டத்தில் சேமிக்க தடுப்பணை கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இருந்தும் பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் கரியகோயில், ஆணைமடுவு அணைகளுக்கு காவிரி உபரிநீரை திருப்பி விடும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் சேலம் கிழக்கு பாசன பகுதிகளை சேர்ந்த வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

வாழப்பாடியை அடுத்த அருநூற்று மலை அடிவாரம் புழுதிக்குட்டை கிராமத்தில், வசிஷ்ட நதியின் குறுக்கே 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 283 ஏக்கர் பரப்பளவில் ஆணைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால், குறிச்சி, சின்னம நாயக்கன்பாளையம், சந்திரபிள்ளைவலசு, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துகோம்பை உள்ளிட்ட கிராமங்களில், 5,011 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது. பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் வெள்ளாற்றின் குறுக்கே, 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் விதத்தில் கரியகோவில் அணை அமைந்துள்ளது. இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த அணைகளை நம்பியே ஆயிரக்கணக்கான ஏக்கரில் பாக்கு சாகுபடி நடந்தது. இந்தியாவின் பாக்கு உற்பத்தியில் 10 சதவீதம் தமிழகத்தில் நடக்கிறது. இதில் தமிழகத்தின் 40 சதவீத பாக்கு உற்பத்தி சேலத்தில் நடக்கிறது. சேலம் மாவட்டத்ைத பொறுத்தவரை வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான  புழுதிக்குட்டை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல்,  இடையப்பட்டி, குறிச்சி,  பேளூர் கொட்டவாடி பகுதிகளில், பாக்கு சாகுபடி அதிகளவில் நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அணைகள் வறண்டு கிடப்பதால் சாகுபடி பாதித்து பெருமைக்கு உலை வைத்து வருகிறது.

மேலும் அணைகளின் வாய்க்கால் பாசனம், நேரடி ஆற்றுப்பாசன ஆயக்கட்டு விவசாயிகளும், சுற்றுப்புற கிராம மக்களும், விளைநிலங்களில் பயிர் செய்ய வழியின்றி, சிரமத்தில் தவித்து வருகின்றனர். எனவே, காவிரி உபரிநீர் பயன்பாட்டு திட்டங்களை கரியகோயில், ஆணைமடுவு அணைகளை மையமாக வைத்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மட்டுமன்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமும் வலுத்து வருகிறது.


பாதி ஆண்டுகள் மட்டுமே நிரம்பியது
விபழைய ஆயக்கட்டு  பாசன விவசாயிகள் சங்க  தலைவருமான  கொட்டவாடி பாலச்சந்தர் கூறுகையில் ‘‘வாழப்பாடி அருகே உள்ள  பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில், கரியகோயில் அணை, எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது கட்டப்பட்டது. அணை கட்டப்பட்டு 30 ஆண்டுகள் கடந்த நிலையில், பாதி ஆண்டுகள் மட்டுமே அணை  நிரம்பியுள்ளது. கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து நீரை கொண்டு நிரப்பும் வகையில் அணை கட்டப்பட்டுள்ளது. ஆனால் நீர்வரத்து இல்லாமல் அணை வறண்டு கிடக்கிறது. இந்த நிலையை மாற்ற, மேட்டூர் அணை உபரி நீரை, பம்பிங் சிஸ்டம் மூலமாக இந்த  அணைக்கு கொண்டு வந்து நிரப்பலாம். இதற்கான தெளிவான திட்ட அறிக்கை அரசின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

கால்வாய் அமைத்து நீரை திருப்பிவிடலாம்
விவிவசாயிகள் சங்க நிர்வாகி முருகேசன் கூறுகையில், ‘‘புழுதிகுட்டையில்  உள்ள ஆணைமடுவு அணையும், பல ஆண்டுகளாக வறண்ட நிலையிலேயே  காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணையின்  நீர்மட்டம் 100 அடியை தாண்டும்  போது, ஒகேனக்கல்லில் இருந்து தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து கீரிப்பட்டிக்கு  வழியாக கால்வாய் அமைத்து 60 கிலோமீட்டர் தூரத்தில் ஆணைமடுவு அணைக்கு நீரை திருப்பலாம். இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவதோடு, 6மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்,’’ என்றார்.



Tags : Kariyakoil , Kariyakoil, Anammaduvu Dam, Cauvery Surface
× RELATED சேலம் கரியகோவில் நீர்த்தேக்கத்தில்...