×

போதை உலகத்தின் தலைநகரான புதுச்சேரி: சட்டவிரோத வணிகத்தில் திளைக்கும் மருந்தகங்கள்.. தமிழக போலீசின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத அரசு

புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு அதிகப்படியான  சுற்றுலாப்பயணிகளை தன்னுடைய அழகால் ஈர்த்து வருகிறது. எங்கெல்லாம் சுற்றுலா  வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்து வருகிறதோ, அங்கெல்லாம்  உற்சாகமும்  கரைபுரண்டு ஓடும். அதற்கேற்ப செயற்கையான போதை வஸ்துகள் பயன்பாடும்  தலைதூக்கும். முறையான கண்காணிப்பு  இல்லையென்றால், அவ்வளவுதான்  சட்டவிரோத மார்க்கெட் என்ற இடத்தை எளிதில் பிடித்துவிடும். புதுச்சேரியில்  சமீபகாலமாக கஞ்சா, போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப கஞ்சா, மற்றும் போதை வழக்குகளை காவல்துறையினர் அதிகம் பதிவு செய்து வருவது இதை உறுதிப்படுத்தியுள்ளது. நாளுக்கு  நாள் வித,விதமான போதை பொருட்களின் வரவும், புதிய கண்டுபிடிப்புகளும் மனித  குல சமூகத்துக்கு மிகவும் எதிராக மாறியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு  முன் ஸ்டாம்ப் போதை பொருட்கள் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் லாஸ்பேட்டையை சேர்ந்த அருண் என்பவரை  கைது செய்து  ஸ்டாம்ப்(எல்எஸ்டி)  போதை பொருளை போலீஸ் கைப்பற்றியது. இது அடங்குவதற்குள் அடுத்த பிரச்னை  தலைதூக்கியுள்ளது. இது மிகவும் சீரியசானது, இந்த பிரச்னை புதுச்சேரியை சட்டவிரோத  போதை பொருட்களின் தலைநகரமாக மாற்றி வருவது கவலையளிக்கிறது.   கேன்சர்,  மூட்டுவலி போன்ற கடுமையான வலிகளுக்கு  பரிந்துரைக்கப்படும் டைடால்,  டிரமடோல், டேப்ன்டோல் ஆகிய மருந்துகளை போதைக்காக பயன்படுத்தும் அதிர்ச்சி  தகவல் வெளியாகியுள்ளது. இதனை குளுக்கோஸ் திரவத்தில் கரைத்து, வடிகட்டி,  இன்சுலின்  ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொள்ளுதல் மூலம் குறைந்தது 5 மணி  நேரம் வரை போதையில் மிதக்கலாம்.

வெளியே யாருக்கும் தெரியாது என்பதால்  கண்டுபிடிப்பது மிகவும் கடினம். கடந்த 2018ம் ஆண்டு சென்னை பல்லாவரம்  பகுதியில்,  பெட்டிக்கடையில் இளைஞர்கள் அதிகப்படியாக தீப்பெட்டிகளை  வாங்கிச்செல்வது  போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கடை உரிமையாளரை கைது செய்து  விசாரணை நடத்தியதில்,  தீக்குச்சிகளில்   டைடால் என்ற மருந்தை தடவி விற்பனை  செய்வது தெரியவந்தது. அதேபோன்று, கடந்த சில நாட்களுக்கு முன் போதை  வாலிபர்களை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.  அவர்களிடம் நடத்தப்பட்ட  விசாரணையில், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மருந்துக்கடைகளில்  டைடால் என்ற மருந்தை  வாங்கி போதைக்காக பயன்படுத்துவதாக கூறியுள்ளனர். மருத்துவரின் பரிந்துரையின்றி எப்படி?  கிடைத்தது என போலீசார் கேள்வி எழுப்பியபோது, புதுச்சேரியில் இருந்து வாங்கி  வந்து திருச்சியின் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யும் பகீர் தகவல் வெளியானது.

அதிரடியாக  விசாரணை நடத்தியதில், தமிழகத்தில் இந்த மருந்துகளை,   மருத்துவர்கள் பெரும்பாலும் யாருக்கும் பரிந்துரை செய்யவில்லை. அதேபோன்று தமிழக  மருந்தகங்களில் இந்த வகை மருந்துகளை அதிகமாக இருப்பு வைத்துக்கொள்வதில்லை.   இதனால் சந்தேகமடைந்த போலீசார், புதுச்சேரிக்கு வந்து, விசாரிக்கும்போது,  பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.  புதுச்சேரியின் 10க்கும்  மேற்பட்ட மருந்தகங்களில், டைடால், டிரமடோல்  உள்ளிட்ட( நார்கோட்டிக் )  வகையான மருந்துகளை அதிகப்படியாக வாங்குவதும், அப்படி வாங்கப்படுபவை  அப்படியே கைமாறி வெளிநாடு, வெளிமாவட்டங்களுக்கு  அனுப்பி வைப்பதும்  தொடர்ந்து நடக்கிறது.  

இங்கு விற்பனை செய்வதாக  கணக்கு காட்டி, போதைக்காக  பிற பகுதிகளுக்கு கடத்துவதன் மூலம் போதைபொருட்களின் தலைநகரமாக புதுச்சேரி  மாறி வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. இது சட்டவிரோத மருந்து வணிகத்தையும்  ஊக்குவிக்குகிறது. உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறையின்  கண்காணிப்பு  மற்றும் ஆய்வு இல்லாததால், மருந்தகங்கள் வரைமுறை இல்லாமல்  செயல்பட்டு வருகிறது.  இது தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு  தகவலை தமிழக போலீசார் தெரிவித்துவிட்டனர். ஆனால் இதுவரை இதன் மீது  உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

கண்காணிப்பில் தொய்வு ஏன்?
புதுச்சேரியில்  உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.  இங்கு ஒரே ஒரு மருந்து ஆய்வாளர் மட்டுமே தற்சமயம் பணியில் உள்ளார்.  மீதமுள்ள 3 ஆய்வாளர் பதவிகளும் நீண்டகாலமாக காலியாகவுள்ளது. ஆட்பற்றாக்குறை  காரணமாக, மெடிக்கல்களில் அதிரடி ஆய்வுகள்  இதுவரை மேற்கொள்ளப்பட்டதில்லை.  புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட மருந்துகள் புழக்கத்தில் உள்ளதா? எவ்வளவு  மருந்துகள், எந்த வகையான மருந்துகளை மெடிக்கல்கள் வாங்குகிறது. கொள்முதல்,  விற்பனை எவ்வளவு என்பதையெல்லாம் கண்காணிப்பதே இல்லை.  இதன்காரணமாக  மெடிக்கல்கள் அனைத்தும் கட்டுப்பாடற்ற முறையில் செயல்பட்டு வருகிறது.

மருந்துவரின் பரிந்துரை இல்லாமல், சிலவகை மருந்துகளை விற்பனை  செய்யக்கூடாது, ஒரே ஒருமுறை எழுதப்பட்ட பரிந்துரை சீட்டுக்கு மீண்டும்  மருந்துகள் வழங்கக்கூடாது. அப்படி தவிர்க்க முடியாத பட்சத்தில் அவரின்  பெயர், செல்போன் எண்களை வாங்கிக்கொண்டு மருந்துகளை மருந்தாளுநர்கள் தர  வேண்டுமென்ற விதிகள் ஒட்டுமொத்தமாக காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.  கண்காணிப்பு குறைபாடுகளே மருந்துகளை தவறாக பயன்
படுத்துவது அதிகரித்துள்ளது.

பக்க விளைவுகள் அதிகம்
வலிநிவாரணிகளை  போதைக்காக தொடர்ந்து பயன்படுத்துவதால், அந்த மருந்துகள் ஒருவரை  அடிமைப்படுத்திவிடும். தொடர்ந்து பயன்படுத்த தூண்டும். இதனை அதிகப்படியாக  பயன்படுத்துவதன் மூலம் தலைவலி, மூச்சுவிடுவதில் சிரமம், உடல் சோர்வு,  அரிப்பு, மலச்சிக்கல், அதிக வியர்வை, வயிற்றுவலி, பார்வையில் குறைபாடு,  வலிப்பு, மூளை செயலிழப்பு, மரணம் ஏற்படும். டைடால் போன்ற மருந்துகள்  மூளையில் உள்ள ரிசப்டார்களை மிக அதிகப்படியாக தூண்டுவதால், பறப்பது போன்ற  உணர்வு ஏற்பட்டு, ஒருவித கிரக்கத்திலே இருக்க வைக்கிறது. இது மிகவும்  ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். இந்த பழக்கம் ஏழ்மையான நாடுகளான நைஜீரியா, சோமாலியா போன்ற நாடுகளில்  இந்த பழக்கம் அதிகமாக இருந்தது.


Tags : Puducherry ,Capital of the World Puducherry , Puducherry, pharmacies .. Tamil Nadu police, Govt
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி...