×

யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு முதல் குற்றவாளியாக நடிகர் மோகன்லால் சேர்ப்பு

திருவனந்தபுரம்: யானை  தந்தங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு குற்றப்பத்திரிகையில் நடிகர் மோகன்லால்  முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் .கடந்த 2011ம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் சென்னை, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் ஒரே நேரத்தில்  அதிரடி சோதனை நடத்தினர். இதில் கொச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்து 4  யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை வருமான வரித்துறையினர்  வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.இது தொடர்பாக வனத்துறையினர் நடிகர்  மோகன்லால் மற்றும் அவருக்கு தந்தங்களை விற்பனை செய்த சென்னையை சேர்ந்த  நளினி மற்றும் திருச்சூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது  வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பின்னர் அப்போதைய காங்கிரஸ் அரசில் வனத்துறை  அமைச்சராக இருந்த திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில்,  மோகன்லாலுக்கு தந்தங்களை கைவசம் வைத்திருக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து  வனத்துறையினர் இந்த வழக்கில் மோகன்லால் உட்பட 3 பேருக்கு எதிராக 8  ஆண்டுகளுக்கும் மேலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில்  கொச்சி ஆலுவாவை சேர்ந்த பவுலோஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில்  மோகன்லாலுக்கு எதிராக ஒரு புகார் அளித்தார். அதில் நடிகர் மோகன்லாலுக்கு  தந்தங்களை கைவசம் வைத்திருப்பதற்காக சட்டத்தை மீறி சிறப்பு அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம் மோகன்லால் உட்பட 3  பேர் மீது உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வனத்துறைக்கு  உத்தரவிட்டது. மேலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர் இது தொடர்பாக  கேரள அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இதையடுத்த கடந்த இரு  வாரங்களுக்கு முன்பு பெரும்பாவூர் நீதிமன்றத்தில் மோகன்லால் உட்பட 3  பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த  நிலையில் கேரள அரசு சார்பில் நேற்று முன்தினம் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டது. அதில் தந்தங்களை கைவசம் வைத்திருந்தது தொடர்பான  வழக்கில் நடிகர் மோகன்லாலை முதல் குற்றவாளியாக சேர்த்து பெரும்பாவூர்  நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Mohanlal ,offender , capture, elephant ,offender, Actor Mohanlal ,added
× RELATED ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில்,...