×

2வது இன்னிங்சிலும் சதம் அடித்து ரோகித் உலக சாதனை தென் ஆப்ரிக்காவுக்கு 395 ரன்கள் இலக்கு: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

விசாகப்பட்டினம்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சிலும் தொடக்க வீரர் ரோகித் ஷர்மா சதம் விளாசி உலக சாதனை நிகழ்த்தினார். இன்று ஒருநாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் தென் ஆப்ரிக்காவுக்கு 395 ரன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.விசாகப்பட்டினத்தில் நடக்கும் முதல் டெஸ்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 385 ரன் எடுத்திருந்தது. முத்துசாமி 12, மகராஜ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது.கூடுதலாக 46 ரன் சேர்த்த நிலையில் தென் ஆப்ரிக்காவின் எஞ்சிய 2 விக்கெட்டுகள் வீழ்ந்தன. மகராஜ் (9), ரபாடா (15) இருவரையும் அஷ்வின் வெளியேற்றினார். முத்துசாமி 33 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணி முதல் இன்னிங்சில் 431 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அஷ்வின் 7, ஜடேஜா 2, இஷாந்த் ஷர்மா 1 விக்கெட் எடுத்திருந்தனர். 71 ரன் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.

ரோகித் ஷர்மா, மயாங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.  முதல் இன்னிங்சில் இரட்டை சதம் விளாசிய மயாங்க் அகர்வால் 7 ரன்னில் மகராஜின் அபார பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த ரோகித்-புஜாரா நிதான வேகத்தில் ரன்களை சேர்த்தது. 2வது விக்கெட்டுக்கு 169 ரன் சேர்த்த நிலையில் புஜாரா (81 ரன், 148 பந்து) பிலேண்டர் பந்தில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிக்சர், பவுண்டரிகளை பறக்க விட்ட ரோகித் 133 பந்தில் சதம் விளாசி, தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே 2 இன்னிங்சிலும் சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தினார்.புஜாராவுக்கு பின் வந்த ரவீந்திர ஜடேஜா தன் பங்குக்கு 32 பந்தில் 40 ரன் விளாசி ஆட்டமிழந்தார். சதம் அடித்து சாதித்த ரோகித், பியட் வீசிய 56வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் விளாசி, ஒரே டெஸ்டில் அதிக சிக்சர் (முதல் இன்னிங்சில் 5, 2வது இன்னிங்சில் 7) விளாசிய வீரர் என்ற மற்றொரு சாதனையையும் நிகழ்த்தினார்.  இவர் 149 பந்தில் 127 ரன் (10 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி மகராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.

விராட் கோஹ்லி 31, ரகானே 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, இந்திய அணி 67 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்னுடன் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. 395 ரன் இலக்குடன் தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சை தொடங்கியது. இதில், முதல் இன்னிங்சில் சதம் அடித்த எல்கர் 2 ரன்னில் ஜடேஜா சுழலில் ஆட்டமிழந்தார். போதிய வெளிச்சமின்மையால் முன்கூட்டியே ஆட்ட நேரம் முடிக்கப்பட்ட நிலையில், தென் ஆப்ரிக்கா 9 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன்களுடன் உள்ளது.இன்றே ஆட்டத்தின் கடைசி நாள். ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால், அஷ்வின்-ஜடேஜா கூட்டணி ஆதிக்கம் செலுத்தும். எனவே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தொடக்க வீரராக அபார சாதனை...
* டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக விளையாடிய முதல் போட்டியின் 2 இன்னிங்சிலும் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் ஷர்மா வசப்படுத்தி உள்ளார்.
* டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்சிலும் சதம் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கவாஸ்கர் இந்த சாதனையை 3 முறை நிகழ்த்தி உள்ளார்.
* 2 இன்னிங்சிலும் சேர்த்து 13 சிக்சர்களை விளாசிய ரோகித் இந்த பட்டியலிலும் முதலிடம் பிடித்தார். பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் 1996ல் ஜிம்பாப்வேக்கு எதிராக 12 சிக்சர் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்திய வீரர்களில் நவ்ஜோத் சிங் சித்து 1994ல் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 8 சிக்சர் அடித்திருந்தார். அக்ரம், சித்து சாதனைகளை ரோகித் முறியடித்துள்ளார்.
* இந்திய அணியின் 2 இன்னிங்சிலும் சேர்த்து 27 சிக்சர்கள் விளாசப்பட்டன. டெஸ்ட் வரலாற்றில் இதுவே அதிகபட்சமாகும்.


Tags : South Africa ,Rohit ,innings ,India , Rohit smashes, second innings,South Africa,India
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...