×

கடும் நெருக்கடியை சந்தித்து வருவதால் அயல்பணி அடிப்படையில் பொறியாளர்கள் வெளியேற விருப்பம்: பொதுப்பணித்துறையில் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளது. இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களில் திருப்பணிகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதிகள், ஓய்வு அறைகள், கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளை கண்காணிக்க பொறியாளர்கள் இல்லாததால் தரமாக நடப்பதில்லை என்கிறகுற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே போன்று இக்கோயில்களில் மின் பணிக்கான மதிப்பீடும் பணியாளர்கள் இல்லாததால் அந்த பணியும் தரமாக மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது.இந்த நிலையில் அறநிலையத்துறையில் கட்டுமான பணிக்கென தகுதி வாய்ந்த கட்டுமான பொறியாளர்களை கொண்ட ஒரு பிரிவும், மின் பணிகளுக்கென தகுதி வாய்ந்த மின் பொறியாளர்களை கொண்ட ஒரு பிரிவும் ஏற்படுத்த வேண்டும் என்று கமிஷனர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தலைமை பொறியாளர் தலைமையில் கண்காணிப்பு பொறியாளர், 8 செயற்பொறியாளர், , 13 உதவி செயற்பொறியாளர், 32 உதவி பொறியாளர், 13 உதவி பொறியாளர் (மின்)தலைமை வரை தொழில் அலுவலர் 2, வரைதொழில் அலுவலர் 13, இளநிலைவரை தொழில் அலுவலர் 32 என மொத்தம் 122 பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது.இதை தொடர்ந்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திரரெட்டி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் எழுதினார்.

அதன்பேரில் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதன்பேரில், அறநிலையத்துறையில் திருக்கோயில் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணிக்கான பணித்தொகுதி ஏற்படுத்தி ஆணை வெளியிடப்–்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையில் மேற்காணும் பணிகளை செய்வதற்கு பணியிடங்களை நிரப்ப கோரப்பட்டது. எனவே, இந்த பணிகளில் செல்ல விருப்பமுள்ளவர்கள் காலதாமதம் இல்லாமல் விண்ணப்பங்களை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. மேலும், தங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறவில்லை எனில் எவருக்கும் விருப்பம் இல்லை எனக்கருதப்படும் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் பொறியாளர்கள், வரைதொழில் அலுவலர்கள் பலர் அயல்பணி அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு செல்ல விருப்பம் தெரிவித்து 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இது பொதுப்பணித்துறை தலைமை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பொதுப்பணித்துறையில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களுக்கும் சேர்த்து தற்போது பணியில் உள்ள பொறியாளர்களிடம் கூடுதலாக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அதிகாரிகள் கடும் நெருக்கடியை தருகின்றனர். மேலும், 3 ஆண்டு கூட ஆகாத நிலையில் பொறியாளர்கள் திடீர், திடீரென மாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால், நெருக்கடிக்கு ஆளான பலர் பொதுப்பணித்துறையில் இருந்து வெளியேற விண்ணப்பித்துள்ளனர் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தனர்.பணியில் உள்ள பொறியாளர்களிடம் கூடுதலாக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அதிகாரிகள் கடும் நெருக்கடியை தருகின்றனர்.

Tags : Outsourcing engineers ,crisis , severe crisis, Outsourcing ,engineers , leave, public sector
× RELATED கழுவு, கழுவுன்னா... எப்படி கழுவுவாங்க...?...