×

தமிழகம் முழுவதும் பஸ் நிலையங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யக்கோரி வழக்கு: பதில் தர அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் மாவட்டம், கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த  ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளன. இதனால், பேருந்து நிலையங்களில் சுகாதார குறைவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நிலையங்களை ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதால்தான் இந்த சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.இந்திய அரசியல் சாசனத்தின் 21வது பிரிவு மக்களின் வாழ்வுரிமையை வழங்கியுள்ளது. அதில் சுகாதாரமான சூழ்நிலையை அனுபவிப்பதும் அடங்கும். மாநிலம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களை சுத்தமாக பராமரிக்க வலியுறுத்தி அதிகாரிகளுக்கு கடந்த 2015ல் மனு கொடுத்தோம். ஆனால், எனது மனு மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனுவுக்கு பதிலும் அளிக்கவில்லை.

 தெருக்களையும், பொது இடங்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டப் பிரிவுகளை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. இந்த சட்டப் பிரிவுகளை அதிகாரிகள் அமல்படுத்தாததால் சுகாதாரக் கேடு அதிகரித்துள்ளது. எனவே, எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து, அனைத்து பேருந்து நிலையங்களிலும் சுகாதாரத்தை உறுதி செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு அக்டோபர் 21க்குள் பதிலளிக்கும்படி, தமிழக வருவாய் துறை, உள்துறை, போக்குவரத்து துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி துறை, சுகாதார துறை செயலாளர்களுக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட்டனர்.

Tags : High Court ,Tamil Nadu All ,government ,Tamil Nadu , Tamil Nadu, High Court ,order,government
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...