×

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாமக, பாஜவை புறக்கணிக்கும் அதிமுக

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக, பாஜவை அதிமுக திட்டமிட்டு புறக்கணிப்பதாக மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வருகிற 21ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதில், விக்கிரவாண்டியில் திமுக, அதிமுக நேரடியாக மோதுகின்றன. நாங்குநேரியில் அதிமுக, காங்கிரஸ் மோதுகின்றன. இந்த இரு தொகுதிகளிலும் திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் 2ம் கட்ட தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களும் வாக்குேசகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விரைவில் பிரசாரத்தை தொடங்க உள்ளனர். திமுக, காங்கிரசை பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் விரைவில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். ஆனால் அதிமுக கூட்டணியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.வேலூர் மக்களவை தொகுதியில் பாஜவை கூட்டணியில் சேர்த்ததால்தான் அதிமுக தோல்வியை சந்தித்தது என்று மூத்த தலைவர்கள் நேரடியாக குற்றம்சாட்டினர். இதனால் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பாஜ தலைவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று அதிமுக தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்காரணமாக, பாஜ தலைவர்களை அதிமுக தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், திடீரென்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இரு தொகுதியிலும் பிரசாரம் செய்வது குறித்து முடிவு எடுக்கவில்லை. அவர்களும் எங்களிடம் ஆதரவு கேட்கவில்லை என்றார். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார், தி.நகரில் உள்ள பாஜ மாநில அலுவலகம் சென்று ஆதரவு கேட்டார். அப்போது மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஜெயக்குமாரிடம் ஆதரவு தருவதாகவும், பிரசாரம் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆதரவை ஏற்றுக் கொண்டபோதும் பிரசாரத்துக்கு வாருங்கள் என்று அவர் அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதேநேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை, மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஜெயக்குமார் ஆகிய 3 அமைச்சர்கள் சந்தித்து ஆதரவு கேட்டனர். அவரும் ஆதரவு தருவதாக அறிவித்தார். நாங்குநேரியில் தேவேந்திரகுல வேளாளர்கள் வசிக்கும் 63 கிராமங்களில் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தனர். இதனால் அந்த சமுதாய தலைவர்களில் ஒருவரான ஜான்பாண்டியனை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, காமராஜ், கடம்பூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ராஜலட்சுமி ஆகிய 7 அமைச்சர்கள் சந்தித்து ஆதரவு கேட்டனர். இதுதான் தற்போது பாஜ தலைவர்களை கோபப்படுத்தியுள்ளது. மற்ற தலைவர்களை ஏன் பல அமைச்சர்கள் சந்திக்கும்போது பாஜவை மட்டும் ஏன் வேண்டா வெறுப்பாக ஒரு அமைச்சர் கடமைக்கு சந்தித்து ஆதரவு கேட்க வேண்டும் என்று கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் இரு தொகுதியிலும் உள்ள பாஜ தொண்டர்களும் ஈடுபாட்டுடன் வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.அதேநேரத்தில் பாஜவையாவது ஒரு அமைச்சர் சந்தித்துப் பேசினார். பாமகவை ஒரு அமைச்சர் கூட இதுவரை சந்திக்கவில்லை. நாங்குநேரியில் பாமகவுக்கு அமைப்பு இல்லாவிட்டாலும், விக்கிரவாண்டியில் அக்கட்சிக்கு செல்வாக்கு அதிகமாக உள்ளது. எனவே, அக்கட்சி அதிமுக கூட்டணியில் இருந்தாலும் ஒரு தலைவர் கூட பாமக நிறுவனர் ராமதாசையோ, இளைஞர் அணி தலைவர் அன்புமணியையோ சந்திக்கவில்லை. கடந்த மக்களவை தேர்தலில் பாமகவுடன்தான் அதிமுக முதலில் கூட்டணியை அறிவித்தது. அதில் பாஜவுக்கும், தேமுதிகவுக்கும் கொஞ்சம் வருத்தம் இருந்தது. பாமகவுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்தனர். ஆனால் இந்த முறை இதுவரை பாமக தலைவர்களை அதிமுகவினர் சந்திக்கவில்லை. விக்கிரவாண்டி தொகுதி, விழுப்புரம் மாவட்டத்தில்தான் வருகிறது. இந்த மாவட்டத்தில்தான் ராமதாசின் சொந்த ஊரும் உள்ளது. அப்படியிருந்தும் அதிமுக தன்னை புறக்கணிப்பதாக ராமதாஸ் கருதுகிறார். இதனால் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதா அல்லது எதிர்த்து ஓட்டளிப்பதா என்று ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.இனிமேல் தன்னை சந்தித்து ஆதரவு கேட்டு வந்தால், உள்ளாட்சித் தேர்தல் குறித்து முடிவை இறுதி செய்த பிறகுதான் தன்னை சந்திக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இது தெரிந்ததால்தான் அதிமுக, பாமகவை தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, பாஜ கட்சிகள் அதிருப்தியில் இருப்பது அதிமுக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த மக்களவை தேர்தலில் பாமகவுடன்தான் அதிமுக முதலில் கூட்டணியை அறிவித்தது. அதில் பாஜவுக்கும், தேமுதிகவுக்கும் கொஞ்சம் வருத்தம் இருந்தது. பாமகவுக்கு அதிக அளவில் முக்கியத்துவம்அளிப்பதாக தெரிவித்தனர். ஆனால் இந்த முறை இதுவரை பாமக தலைவர்களைஅதிமுகவினர் சந்திக்கவில்லை.


Tags : Bamaka ,BJP ,Nanukuneri ,Bajaj ,AIADMK , Nanukuneri, idolatry, by-election,
× RELATED அனுஷ்கா சர்மாவை விராட் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் : பாஜக எம்.எல்.ஏ