×

நெல் கொள்முதல் விலையை 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

சென்னை : நெல்லுக்கான கொள்முதல் விலையை  3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை : தமிழ்நாட்டில் 2019-20ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் பருவம் தொடங்கிவிட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் கொள்முதல் விலைகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. நெல் கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் போது நெல்லுக்கான உற்பத்திச் செலவு உள்ளிட்ட கள எதார்த்தங்களை அரசு கருத்தில் கொண்டால் மட்டும்தான் உழவர்களின் துயரங்களை ஓரளவாவது துடைக்க முடியும்.நடப்பாண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை மத்திய அரசு கடந்த ஜூலை மாதமே அறிவித்து விட்டது. சாதாரண வகை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 1750லிருந்து 1815 ஆகவும், சன்ன வகை நெல்லுக்கான கொள்முதல் விலை 1770லிருந்து 1835 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 200 உயர்த்திய மத்திய அரசு, இம்முறை அதில் மூன்றில் ஒரு பங்கான 65 மட்டும்தான் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.

நடப்பாண்டில் நெல்லுக்கான உற்பத்திச் செலவு குவிண்டாலுக்கு 2091 என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அத்துடன் 50 சதவீதம் லாபம், அதாவது 1046 சேர்த்து கொள்முதல் விலையாக 3137 வழங்கினால்தான் உழவர்களுக்கு கட்டுபடியாகும். மாறாக, வழக்கம்போல ஊக்கத்தொகை என்ற பெயரில் 70 மட்டும் வழங்கினால், ஊக்கத்தொகை என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்து விடும்.எனவே, உழவர்களுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் 3,000 கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகையை அதிகரித்து, நியாயமான கொள்முதல் விலையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Paddy ,Ramadas ,founder , Paddy purchase ,Ramadas ,founder Bamaka
× RELATED அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை...