×

தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிடாததால் அதிமுக அரசு மீது புதிய தமிழகம் அதிருப்தி: எடப்பாடிக்கு கிருஷ்ணசாமி கடிதம்

சென்னை: ஏழு பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடாததால் அதிமுக மீது புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கடும் அதிருப்தியடைந்துள்ளார். அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இடம் பெற்றுள்ளது. மேலும் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் இடம்பெற்றுள்ளது. இந்த இரு கட்சிகளும் கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தன.  இடைத்தேர்தலிலும் ஆதரவு தெரிவித்தன. மக்களவை தேர்தலின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், இந்த இரு கட்சிகளும் 2 கோரிக்கைகளை முன் வைத்தன. அதில், பள்ளர், குடும்பன் உள்ளிட்ட 7 உள்பிரிவுகளை ஒன்றிணைத்து  தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும். தங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதில் முதல் கட்டமாக 7 உள்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை வெளியிடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மதுரையில் நடந்த கூட்டத்தில், பிரதமர் மோடியும் அறிவித்தார். ஆனால்  தேர்தல் முடிந்த பிறகு அந்த கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் 63 கிராமங்களைச் சேர்ந்த தேவேந்திரர்கள், தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்தனர். அதோடு, அரசியல் கட்சியினர் தங்கள் ஊருக்குள் வந்து  பிரசாரம் செய்யக்கூடாது என்றும் அறிவித்தனர். வேட்பாளர்களையும் தடுத்து திருப்பி அனுப்பினர்.

 இந்நிலையில், தமிழக அரசு சொன்னபடி அரசாணை வெளியிடாததால் அதிமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமிக்கு, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதியுள்ளார். எங்கள் கோரிக்கையின்படி அரசாணை வெளியிடாவிட்டால் அதிமுக கூட்டணியில் நீடிப்பது சந்தேகம் என்று கூறியுள்ளார். இதனால் நாங்குநேரியில்  அதிமுக கணிசமான ஓட்டுக்களை பெறுவது சந்தேகம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Tamils ,government ,AIADMK ,Devendra ,clan leader ,Krishnaswamy , New Tamils dissatisfied with AIADMK government's failure to release Devendra clan boss: Krishnasamy
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!