×

பைக் திருட்டு வழக்கு பதிய பிக்ஸ்சிங் ரேட்

திருவண்ணாமலை நகரில் கிழக்கு காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த காவல்நிலையத்தில் வாகன திருட்டு அடிதடி உள்ளிட்டவை குறித்து வழக்கு பதிவு செய்வதற்கு பொதுமக்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர். இதில் திருட்டு  உட்பட ஒவ்வொரு குற்ற வழக்குகளையும் பதிவு செய்வதற்கு போலீசார் தனித்தனியாக ரேட் பிக்ஸ் செய்துள்ளார்களாம். இதனால் காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் புகார் வாங்கிக்கொண்டு வழக்கு பதிவு செய்யாமல் சில நாட்கள் அலைக்கழிப்பார்களாம். பின்னர் இந்த ரேட் பிக்ஸ்சிங் மேட்டரை காவல்நிலைய காக்கிகள் புகார்தாரர்களுக்கு  பட்டும்படாமல் நாசூக்காக கூறுவார்களாம்.

இதில் தற்போது பைக் திருட்டு வழக்குதான் நல்லா களைகட்டுதாம். காரணம் திருட்டு போன பைக்கிற்கு இன்சூரன்ஸ் பணத்தையாவது பெறலாம் என்று காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வருகிறார்களாம். அவர்களிடம் கிழக்கு காக்கிகள்  பிக்ஸ்சிங் ரேட் ரூ.1,000 முதல் ரூ.2 ஆயிரம் வரை கறக்காமல் விடுவதில்லையாம். இதை இன்ஸ்பெக்டரும் கண்டுகொள்வதில்லையாம். இவர்களை யார்தான் தட்டிக்கேட்பது தெரியவில்லையே என்று ஆன்மிக நகர மக்கள் புலம்பித்தீர்க்கின்றனர்.

அமைதி... வளம்... வளர்ச்சி...!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில் அந்தியூர், வெள்ளித்திருப்பூர், பர்கூர் ஆகிய 3 காவல்நிலையங்கள் உள்ளன. ஒரு ஸ்டேஷன் இருந்தாலே வளம் செழிக்கும் நிலையில், மூன்று ஸ்டேஷன்கள் இவரது  கைவசம் இருப்பதால் ஒரே வளம், வளர்ச்சிதான். இதை, வெளிக்காட்டாமல், அமைதியாக இருப்பதே இவரது பலம். இவரது காட்டில் பெய்யும் மழையை பார்த்து, சக இன்ஸ்.கள் பொறாமைப்படுகிறார்கள். அந்த அளவுக்கு இவரிடம் அன்றாடம்  வளர்ச்சி காணப்படுகிறது. உச்சத்தில் இருக்கும் இவர், அந்தியூர் குருநாதசுவாமி கோயில் திருவிழாவில் ராட்டினம் அமைக்க அனுமதி வழங்கியதில் பல லகரங்களை விழுங்கியுள்ளார், பர்கூர் மலைப்பகுதியில் சிவில் விவகாரத்தில் தலையிட்டு  கரன்சி குவித்துள்ளார் என அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதுதொடர்பான புகார் மனுக்களை சிலர், ஆதாரப்பூர்வமாக தட்டிவிட்டும், இதுவரை நடவடிக்கை இல்லை. வளமும், வளர்ச்சியும்தான் இதற்கு காரணம் என்கிறார்கள்  சக அதிகாரிகள்.

மொபட் 600 ரூபாய், பைக் 1000 ரூபாய்..!

கோவை சூலூர் காவல் நிலைய வளாகத்தில், பல்வேறு திருட்டு வழக்கில் சிக்கிய வாகனங்கள், சாலை விபத்தில் சிக்கிய வாகனங்கள் என 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. வழக்கு விசாரணை முடிவடைந்த  பின்னர், இவற்றை பொது ஏலத்தில் விடுவது வழக்கம். ஆனால், விதிமுறைக்கு மாறாக, இக்காவல்நிலைய அதிகாரிகள் சிலர், இரவோடு இரவாக பெரும்பாலான வாகனங்களை தரை ரேட் பேசி விற்பனை செய்துவிட்டனர். மொபட் 600 ரூபாய்,  பைக் ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை என ரேட் பேசி, அடிமாட்டு விலைக்கு விற்றுள்ளனர். இயக்கவே முடியாத நிலையில் இருந்த, பல இரு சக்கர வாகனங்களை, பழைய இரும்பு ரேட்டுக்கு விற்பனை செய்துள்ளனர். எத்தனை  வாகனம் விற்கப்பட்டது? அதன்மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு? என்ற கணக்கு வழக்கு இல்லை. வழக்கு விசாரணை முடிவடைவதற்கு முன்பே, சில வாகனங்களை விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. சூலூர் பகுதியில் பழைய பேப்பர்,  பழைய இரும்புகளை பொறுக்கி விற்கும் 4 பெண்களிடமிருந்து பறிமுதல் செய்த காப்பர் ஒயர் மற்றும் அலமினிய ஒயர்களையும் இந்த அதிகாரிகள் விற்று, காசு பார்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

பிஸ்டலை நீட்டிய ‘2 ஸ்டார் அதிகாரி’

முத்துநகரில் வடக்காக உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் அதிகாரி நேர்மையானவர் என பெயர் பெற்றவர். ஆனால் சட்டென கோபம் தலைக்கேறி விடும். சமீபத்தில் இரவு நேரத்தில் ஒரு புகார் வர அதை விசாரித்துக்  கொண்டிருந்தார். அப்போது புகார் மனுதாரர், எதிர்மனுதாரர் இருவரின் தரப்பிலும் சட்ட நிபுணர்களை அழைத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் எதிர்மனுதாரர் தரப்பு, ஒரு படி மேலே சென்று அந்த 2 ஸ்டார் அதிகாரியிடம், நான் சொல்வது போல  செய்யுங்கள் என ஆர்டர் போட்டாராம்.
கோபம் கொப்பளித்த அந்த அதிகாரி, அதற்கு வேற ஆளை பார். நான் வேற மாதிரி, எங்கிட்ட உனது ஆர்டர் எல்லாம் செல்லாது எனக்கூறி, தான் வைத்திருந்த பிஸ்டலை எடுத்து அவரது நெற்றிப்பொட்டில் வைத்து விட்டாராம். எனக்கு உத்தரவு  போட நீ யார், என் விசாரணையில் குறுக்கிட்டால் அவ்வளவுதான் என பொரிந்து தள்ளியுள்ளார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனிருந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் பாய்ந்து சென்று தடுத்து அவரை ஆசுவாசப்படுத்தியுள்ளனர்.

Tags : Picking rate for bike theft case
× RELATED இந்தியாவின் 4 பெரிய நகரங்களில்...