×

எதிரும்... புதிருமாக...இன்ஸ்பெக்டர், எஸ்ஐ

தேனி மாவட்டம், சின்னமனூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், எஸ்ஐயிடையே கடும் புகைச்சல் கிளம்பி உள்ளதாம். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்து வந்தனர். ஆனால்,  கடந்த சில நாட்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சமீபமாக வழக்கு தொடர்பாக வருவாரிடம், ‘நம்ம சாமியை கும்பிடுற உங்க பிரச்னை தீர்வுக்கு நான் பொறுப்பு’ என்று இன்ஸ்பெக்டரும், எஸ்ஐயும் தனித்தனியாக ஒரு  டீமை உருவாக்கிக் கொள்கிறார்களாம். ‘இன்ஸ்பெக்டர் பேச்சை எஸ்ஐ கேட்பதில்லை’ என்ற புகார் ஒரு புறமிருக்க, ‘எஸ்ஐயை இன்ஸ்பெக்டர் மதிப்பதில்லை’ என்ற இருவேறு குற்றச்சாட்டுகளோடு ஒற்றுமை இழந்த நிலையில் காவல்நிலையம்  போய்க் கொண்டிருக்கிறது.

 போலீசாரும் இருவரில் யார் பேச்சைக் கேட்பது என்ற குழப்பத்தில் தவிக்கின்றனராம். இவங்க பிரச்னையே தீராத நிலையில், பொதுமக்களோ தங்கள் பிரச்னைக்கு எந்த தீர்வும் பெற முடியாமல் தவியாய் தவித்து  வருகின்றனராம். தேனி எஸ்பி தலையிட்டு இன்ஸ்பெக்டர் - எஸ்ஐ பஞ்சாயத்தை தீர்த்து, தங்கள் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சின்னமனூர் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அங்கும்..இங்கும்... ஓடுது அலறவிடும் டிபார்ட்மென்ட்

மாங்கனி மாவட்டத்தில் விஜிலென்ஸ் போலீசார், சொந்த கட்டிட வசதி இல்லாமல் அல்லாடிக்கிட்டு இருக்காங்க. சொர்ணபுரியில் வாடகை கட்டிடத்தில் ஆபீஸ் இருந்தது. வாடகை சரியாக வருவதில்லை என்று கூறி, அதன் உரிமையாளர்  போர்க்கொடி தூக்கவே, அங்கிருந்து இடம் மாறியது. இப்போது குமாரசாமிப்பட்டியில் சுகாதார நிலையம் இருந்த இடத்தில் ஒரு கட்டிடத்தில் டாக்குமென்ட்டுகளை எல்லாம் வச்சிருக்காங்க. இதுவும் நிரந்தரமான இடம் என்று சொல்ல முடியாது.  5வருஷத்துக்கு முன்னாடி சொந்த கட்டிடம் கட்டுவதற்கான மூவ்மென்ட்டுகள் ஜரூராக நடந்தது. முன்னாள் சிஎம் சிறைக்கு போன பிறகு, பணிகள் எல்லாம் அப்படியே நின்னு போச்சு. அதற்கு பிறகு ஒட்டு மோத்த அதிகாரத்தையும் தன்  கையில் வைத்திருக்கும் மண்ணின் மைந்தரும் கண்டுக்கவே இல்லை. இதனால் சொந்த கட்டிடம் இல்லாமல் தத்தளிக்குது விஜிலென்ஸ் டிபார்மென்ட். ரெய்டு என்று அதிகாரிகளை அலற விடும் இந்ததுறை, சொந்த கட்டிடம் இல்லாமல்  கண்ணீர் வடிப்பது வேதனை என்று குமுறுகின்றனர் நேர்மையான காக்கிகள்.

டி.எஸ்.பி. இடம் மாறிட்டாரு...குட்கா விற்பனை கும்பல் குஷி

குமரி மாவட்டம் முழுவதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பெரிய அளவில் சப்ளை இருந்தது. இது பற்றி கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 3 மாதங்களுக்கு முன், மார்த்தாண்டம் கோதேஸ்வரம் பகுதியில் ஒரு  பெரிய குடோனில் இருந்த  ரூ.1 கோடி மதிப்பிலான குட்காவை கண்டுபிடித்தார்கள். தக்கலை டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை தான் இந்த ஆபரேஷனை நடத்தி முடித்தார்கள். முகமது அலி என்ற புரோக்கரை முதலில்  பிடித்து அவரை ரகசியமாக கண்காணித்து மேலும் 3 பேர் சிக்கியதுடன், குடோனும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் தொழிலதிபர் ஒருவரும் சிக்கினார். அதன் பிறகே இந்த கும்பலுக்கு மேலிடம் வரை செல்வாக்கு இருப்பது தெரிந்தது. இந்த ஆபரேஷன் நடத்தியவர்கள் யார்? என்பது பற்றிய பட்டியலை எடுத்து அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்  என்று கோரிக்கை வலுவாக எழுந்த நிலையில், சமீபத்தில் தக்கலை டி்.எஸ்.பி. கார்த்திகேயன் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த அறிவிப்பு வந்த நாள் முதல், குட்கா கும்பல் உற்சாகத்தில் உள்ளார்களாம். நம்ம மீது கை வைத்தால் என்ன  நடக்கும் என்பதை நிரூபித்து விட்டோம் என்பது போல் தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்களாம். மாறுதல் அறிவிப்பு வந்த அன்று, மிகப்பெரிய உற்சாக பான விருந்து நடந்துள்ளதாகவும், இதில் சில  அதிகாரிகள் பங்கேற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தது யார்? என்பது மட்டும் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதாம்.

போக்குவரத்து புலனாய்வு பிரிவில் போலீசை அலைக்கழிக்கும் எஸ்.ஐ

மலைக்கோட்டை மாநகரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சினிமா நடிகர் புரோட்டா சூரி போல் நித்தமும் காமெடி அரங்கேறுவதால் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விழி பிதுங்கி உள்ளனர்.தெற்கு போக்குவரத்து பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஏற்படும் விபத்து குறித்து தகவல் அறிந்து பணியில் இருந்து முதலில் செல்லும் போலீசார் சம்பவங்கள் குறித்து குறிப்பெடுத்தும், மேப் போட்டும் முறையாக விசாரணை நடத்தி காவல் நிலையம்  வருகின்றனர். காவல் நிலையம் வந்த பின், இதுகுறித்து எஸ்ஐ ராக்கெட்டானவருக்கு உரிய விளக்கங்கள் அளித்து கூறுகின்றனர்.

 ஆனாலும், எதுவும் விளங்காதது போல் நடந்து கொள்ளும் எஸ்ஐ, வா மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை  நடத்தலாம் என கூறி போலீசாரை அழைத்து செல்கிறார். அங்கு மீண்டும் முதலில் இருந்து குறிப்பெடுத்தும், மேப் போடப்படுகிறது. ஏற்கனவே முதலில் நடத்தும் விசாரணையும், எஸ்ஐ வந்த பின் நடத்தப்படும் விசாரணையும் சரியாக  இருப்பதால் இந்த எஸ்ஐயை வைத்து கொண்டு என்ன செய்வது என போலீசார் தலையில் அடித்து கொள்கின்றனர். இவர் ஏற்கனவே குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவு கடத்தல் புகாரில் மாநகரில் இருந்து புறநகருக்கு மாற்றப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

Tags : Inspector ,Newcomer ,SI , Opposing ... Newcomer ... Inspector, SI
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு