×

விளையாட்டு துளிகள்

நேற்று தொடங்கியது யுசிசிகே பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி

மாணவர்களுக்கான செஸ் விளையாட்டு போட்டி யுசிசிகே பள்ளியில் நேற்று தொடங்கியது. சென்னை அயனம்பாக்கம், வானகரம் சாலையில் உள்ள யுசிசிகே பள்ளியில் மாணவர்களுக்கான செஸ் போட்டி நேற்று தொடங்கி இன்று வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை ஞான வித்யா செஸ் அகடாமியும், திருவள்ளூர் மாவட்ட  செஸ் சங்கமும் சேர்ந்து நடத்துகிறது. போட்டியில் பங்குபெருபவர்கள் ₹150-யை ஆன்லைனில் நுழைவுகட்டணமாக செலுத்த வேண்டும்.


அரசு ஊழியர்களுக்கான வாலிபால் பள்ளி கல்வித்துறை அணி சாம்பியன்

அரசு ஊழியர்களுக்கான வாலிபால் போட்டியில் பள்ளி கல்வித்துறை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் சென்னை மாவட்ட மாநில அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இப்போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தியது.  இதில், மாநில அரசின்  அனைத்து துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்கள், தலைமை செயலக, காவல்துறையில் அமைச்சு  பணியாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் தடகளம், கூடைபந்து, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு  போட்டிகள் நடத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் வாலிபால் போட்டியில் ஆண்கள் பிரிவில் பள்ளி கல்வித்துறை அணி, தமிழ்நாடு தேர்வாணையம் அணி, வணிகவரித்துறை அணி, காவல்துறை அமைச்சு பணியாளர்கள் அணி என மொத்தம் 8  அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் பள்ளிக்கல்வித்துறை அணியும் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் அணியும் மோதின. இதில் பள்ளிக்கல்வித்துறை அணி 25-18, 25-21 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை  வென்றது.

இந்துஸ்தான் கல்லூரி வேந்தர் நினைவு கோப்பை இந்திய அணி வெற்றி

இந்துஸ்தான் கல்லூரி வேந்தர் வர்கீஸ் நினைவு கோப்பையை சூடானை தோற்கடித்து 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்துஸ்தான் கல்லூரி வேந்தர் கே.சி.ஜி.வர்கீஸ் நினைவு கால்பந்து போட்டி 2019-ஐ இந்துஸ்தான் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி உடற்கல்வித்துறை நடத்தியது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டினர் கலந்து  கொண்டனர். இதில் இந்தியா, சூடான் மற்றும் சோமாலியா கடைசி 3 இடத்துக்கு சென்றன. அதில் இறுதி போட்டியில் இந்தியா, சூடானை 2-0 என்ற புள்ளி கணக்கில் வென்றது. இதற்கான பரிசளிப்பு விழாவில் இந்துஸ்தான் கல்லூரி வேந்தர்  எலிசபெத், கால்பந்து விளையாட்டு வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான சி.எம்.ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Tags : Game Drops
× RELATED ஐபிஎல் டி20 கிரிக்கெட்; பெங்களூரு – கொல்கத்தா இன்று மோதல்