×

திருவள்ளூர் மாவட்டத்தில் இறக்கை கட்டி பறக்குது போதை பொருள் விற்பனை: nதடம் மாறும் இளைய தலைமுறையினர் விலை போகும் உள்ளூர் போலீசார்

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் காஞ்சிபுரம் போதை பொருள் கடத்தல் தடுப்பு துறையினர், கடந்த ஒன்பது மாதங்களில், கஞ்சா கடத்தலை தடுத்து 150 கிலோவிற்கு மேல் பறிமுதல் செய்துள்ளனர். வெளிமாநிலத்தவர்  உட்பட 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இருந்தாலும் மீண்டும் கஞ்சா வியாபாரம் களைகட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல், உள்ளூர் போலீசார்  உதவியுடன் நடப்பதால், இளைய தலைமுறையினர்போதைக்கு அடிமையாகி, சமுதாயத்தை சீரழித்து வருகிறது.

பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா, கொகைன், ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் திருவள்ளூர் வழியாக சென்னைக்குள் விற்பனைக்கு நுழைகின்றன. குறிப்பாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் போலீஸ் சப் -  டிவிஷனில் உள்ள பகுதிகளில், குடிசை தொழில் போல போதை பொருட்கள் விற்பனை நடப்பதாக, அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். உள்ளூர் போலீசாருக்கு கணிசமான பணம் கிடைப்பதால், அவர்கள் இதை கண்டுகொள்வதில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தற்போது, லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலாக, போதை பொருட்கள் விற்பனை மாறி  வருகிறது.

இறக்கை கட்டி பறக்கும் போதை பொருட்கள் விற்பனையால், இளைய தலைமுறையினர், தங்கள் வாழ்க்கையை சீரழித்து, சமுதாயத்தையும் கேள்வி குறியாக்கி வருகின்றனர்.போதை பொருள் விற்பனையை, மாவட்ட போலீசார் இரும்பு கரம்  கொண்டு ஒடுக்க வேண்டும். எளிய கல்வி முறை, விளையாட்டு, சமூக கலாசாரம் உள்ளிட்டவை வழியாக, இளம் தலைமுறையை போதை பழக்கத்தில் இருந்து மீட்க முடியும். அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கையில், அரசு கவனம் செலுத்த  வேண்டும்.போதை பொருள் கடத்தல் தடுப்பு துறை, நுண்ணறிவு தகவல் மற்றும் திடீர் சோதனைகள் மூலம், கைது, பறிமுதல், வழக்கு பதிவு செய்தாலும், போதை பொருட்கள் விற்பனையை தடுக்க முடியவில்லை என்பதே உண்மை. இளைய  தலைமுறையினரின் வேகமான வாழ்வியல் நடைமுறை, கல்வி, வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றால் ஏற்படும் மன அழுத்தங்களை பயன்படுத்தி, சமூக விரோதிகள், போதை பொருளின் தேவையை அதிகரித்து, வலை விரிக்கின்றனர்.

வேலை  வாய்ப்பில்லாத இளைஞர்கள், நகை பறிப்பு, திருட்டு, கொலை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட, போதை பொருளின் துணை தேவைப்படுகிறது. இம்மாவட்டத்தில் அவ்வப்போது நடந்துவரும் சில கொலை சம்பவங்களில்  கைதானவர்கள் போதையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு மாவட்டத்தில் பல கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தடுப்பு வழக்கில், உள்ளூர் போலீசார் முழுமையான ஈடுபாடு காட்டுவதில்லை. அவர்கள், ‘’விலை’’ போவதே, பல்வேறு புதிய  குற்றங்களுக்கு காரணமாகிறது. ஆனால், மாவட்ட எஸ்.பி., கண்டிப்பானவராக இருந்தாலும், அவர்களுக்கு கீழே வேலை செய்பவர்கள், போதை பொருள் வியாபாரிகளுக்கு ஆதரவாகவே உள்ளனர்.

இந்த நிலையில், போதை பொருள் கடத்தல் தடுப்பு துறையினர், அதிரடி சோதனை, கடத்தல் தடுப்பு பணியுடன், பள்ளி, கல்லூரிகளில், போதை பொருள் தீமை குறித்து, விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, காஞ்சிபுரம் போதை  பொருள் கடத்தல் தடுப்பு துறையினர், ஒன்பது மாதங்களில், 150 கிலோவிற்கு மேல் கஞ்சாவை பறிமுதல் செய்து, கடத்தலை தடுத்துள்ளனர். வெளி மாநிலத்தவர்கள் உட்பட, 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய, வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க, நேர்மையான போலீசார், தீவிர  நடவடிக்கையில் இறங்க வேண்டும். போதை பழக்கத்தில் இருந்து, இளைஞர்களை மீட்டு, நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையாளர்கள் மீது தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன் தீமை குறித்த விழிப்புணர்வை, பள்ளி பருவத்தில் இருந்தே செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்,  விளையாட்டு, சமூக கலாசாரம் ஆகியவற்றில், அனைத்து மாணவர்களையும் ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான், போதை பொருளின் தேவையும், அதன் மீதான ஆர்வமும் குறையும்.கஞ்சா கடத்தலில், திருவள்ளூர் மாவட்டத்தை  சேர்ந்தவர்களும் அதிகம் ஈடுபடுகின்றனர்.
அதற்கு காரணம், விவசாயம், வேலை வாய்ப்பின்மை என தெரிய வந்துள்ளது. இதனால், பொருளாதாரம் இன்றி ₹20 ஆயிரம் முதல், 30 ஆயிரம் வரையிலான சம்பளத்திற்கு ஆசைப்பட்டு கஞ்சா கடத்தலில் ஈடுபடுகின்றனர். அதற்காக, ஆந்திரா,  கர்நாடகாவிற்கு சென்று, சில நாட்கள் தங்கியிருந்து, கஞ்சா கடத்தி வருகின்றனர்.

பறிமுதல் கஞ்சா விவரம்: கடந்த ஜனவரி 27ம் தேதி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்சில் கடத்தப்பட்ட 14 கிலோ கஞ்சாவை திருவள்ளூரில் பறிமுதல் செய்யப்பட்டது. நரசிம்மராவ்(55) என்பவர் கைது செய்யப்பட்டார். மார்ச் 27 அன்று திருவள்ளூர் பஸ்  நிலையம், ரயில் நிலையம் பகுதிகளில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு விசாகப்பட்டினம் அர்ஜுன்(28), சாக்ரின்(21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜூலை 6 அன்று திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ரமேஷ்(27) என்பவர் கைது செய்யப்பட்டார். ஜூலை 19 அன்று திருவள்ளுர் அருகே 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சொகுசு காரும்  பறிமுதல் செய்யப்பட்டு, கள்ளக்குறிச்சி மதன்குமார்(40), கோபிநாத்(40) கைது செய்யப்பட்டனர்.  இவை அனைத்தும் காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்பின்னர் உஷாரான திருவள்ளூர் எஸ்.பி., தனிப்படை அமைத்ததில், ஆகஸ்ட் 29 அன்று காக்களூரில் 1 கிலோ கஞ்சா, 265 குவார்ட்டர் மது, ₹3.17 லட்சத்துடன் ரமேஷ்(28), அரவிந்தன்(20), 30ம் தேதி 2 கிலோ கஞ்சாவுடன் திருவள்ளூர்  சுரேஷ்(28), செப்டம்பர் 6 அன்று பூட்டிய வீட்டில் 5 கிலோ கஞ்சா, 7 அன்று 5 கிலோ கஞ்சாவுடன் கன்னியம்மாள்(55), வனிதா(44) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Tags : sale ,district ,Tiruvallur , Drugs for sale in Tiruvallur district
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...